நவ.29.
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியது-
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 3வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். மாணவி அனிதாவை யாராலும் மறக்க முடியாது. அவர் உச்ச நீதிமன்றம் வரை சென்று தனது கல்வி உரிமையை போராட துணையாக இருந்தவர் . சட்டமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும், சமூக வலைதளமாக இருந்தாலும் களப்போராளிதான் சிவசங்கர்.
அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல், அதிமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்காமல் இழுத்தடித்த போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்தார் . சென்னை மாநகரத்தில் பேருந்துகள் இயங்கக்கூடிய தகவல் அறிய பஸ் செயலி, -பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமரா, -வாட்ஸ்அப் இணையதளங்கள். -அரசு பேருந்துகளில் 3 வயது வரை இலவசம் என்றிருந்ததை ஐந்து வயது வரை இலவசமாக பயணிக்கலாம் என உயர்த்தி இருக்கிறோம். ஓட்டுநர் உரிமத்திற்காக இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி என சாதனைகளை தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்க கூடியவர்தான் அமைச்சர் சிவசங்கர். அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்க கூடாது அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம்.
இவை அனைத்தும் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான செயல்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது. ஒரு முதலமைச்சர் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த கால ஆட்சி. தனது கையில் அதிகாரம் இருந்த போது கைகட்டி வேடிக்கை பார்த்து தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி- பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள் இன்று அதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார் கொடுக்கிறார்கள். போய் யாரிடம் கொடுத்தார்கள் உங்களுக்கு தெரியும். .அதையெல்லாம் மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள் . உங்கள் யோக்கியதை தான் எங்களுக்கு தெரியுமே என்று ஏளனமாக சிரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால் கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கு எல்லாம். இருக்கும் பதவி நிலைக்குமா என்ற பயமாக இருக்கிறது என்பதால் தான் மக்களை பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்கள் ஆட்சி நடக்கிறது கவலைப்படாதீர்கள். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்தவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும். தங்கள் கையில் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு மகாயோக்கியரைப் போல- உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை. தமிழகம் இழந்தவைகளை மீட்பது மட்டுமல்ல. இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடைவதுதான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்த குறிக்கோளோடு நானும் அனைவரும் பணியாற்றுகிறோம் என்றார்.
விழாவில் அமைச்சர்கள் கே என் நேரு, எம் ஆர் கே பன்னீர்செல்வம், ரகுபதி, கணேசன், எம் பி – முன்னாள் மத்திய அமைச்சர் ஆ .ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. எம்எல்ஏக்கள் சின்னப்பா, கண்ணன், பிரபாகரன் அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.