மே.20.
கரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 10 மணி நேரத்தில் மாவட்டத்தில் 192.90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் கரூரில் மட்டும் 113 மி.மீ. மழை பெய்துள்ளது. கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்தது. அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காற்று மற்றும் மரக்கிளைகள் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மின்சார வாரிய ஊழியர்கள் உடனுக்குடன் பழுதினை சரி செய்து மின் இணைப்பு கொடுத்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பு-
கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் அதிக அளவில் எற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மழையின்போது வெளியில் செல்வது, நீர் தேங்கியுள்ள சாலைகள், நீர்நிலைகள் ஆகியவற்றுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைடைகளையும் இடி மின்னலில் இருந்து பாதுகாக்க ஏதுவாக பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
கோடை மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலையர் அலுவலக அவசர கால கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04324-258306 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு வெள்ள சேதம் குறித்த புகார்களை தெரிவிக்குமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.