சட்டப்பேரவையில் விவாதத்தில் தங்கமணி பேசும்போது குறுக்கிட்டு விளக்கமளித்த மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது-
குறைக்கப்பட்ட கடன் சுமை!
பொதுவாக கடந்த காலங்களில் வாங்கியிருக்கக்கூடிய கடனுக்கான வட்டி செலுத்துவதே ஆண்டுக்கு சுமார் 16,500 கோடி ரூபாய்.
இந்த 4 ஆண்டுகளில் புதிதாக ஏதோ மின்சார வாரியத்திற்கு கூடுதலாக கடன் ஏற்பட்டுள்ளது, புதிய கடன் சுமை ஏற்பட்டதைப்போல இங்கே உறுப்பினர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். கடந்த காலங்களில் வாங்கிய கடன் அப்படியே இருக்கிறது. அதற்கான வட்டியை மின்சார வாரியம் செலுத்திக்கொண்டிருக்கிறது. கூடுதலாக தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை அவரது ஆட்சியில் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இப்போது கடந்த ஆண்டு 2024–25 வரை 338 கோடி ரூபாய் மட்டும்தான் கடன் ஏற்பட்டுள்ளது. இந்தளவிற்கு மின்சார வாரியத்தைமேம்படுத்தி, கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகளை யெல்லாம் முழுவதுமாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.
சம்பளம், உதிரி பாகங்கள்,நிலக்கரி உட்பட அதனுடைய விலைகள் ஏறியிருக்கின்றன. தெரிந்திருந்தாலும்கூட அந்தக் கருத்துகளை முன் வைக்கின்றார். அந்த உண்மையைச் சொல்லுங்கள். 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்க வேண்டுமென்றால் evening peak, morning peak ஆக இருக்கும், அந்த இடங்களில் overload வரும். அதற்கான எந்தவிதமான கட்டமைப்பையும் மேற்கொள் ளாமல், அவசர கோலத்தில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
மும்முனை மின்சாரம்!
அதேபோல டெல்டா பகுதிகளில் 8 மணி நேரம் என்ற சொன்னார். 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் முழுவதுமாக வழங்கப்பட்டிருக்கின்றன. எந்த இடத்திலும் தடையில்லாத முன்முனை மின்சாரம் 16 மணி நேரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. விவசாய பெருமக்களிடத்தில் ஒரு தவறான கருத்தை எடுத்து செல்ல வேண்டாம். அவருடைய ஆட்சியில் மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் வழங்கப்பட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது.
பேரவைத் தலைவர் அவர்களே, பூரண மதுவிலக்கு பற்றிப் பேச வேண்டுமென்றால், அவரும், அவருக்கு அடுத்து மூன்றாவதாக அமர்ந்திருக்கிற அண்ணன் நத்தம் அவர்களும் பல்வேறு கருத்துகளை இந்த டாஸ்மாக் நிறுவனம் சம்பந்தமாக, மதுவிலக்குகள் சம்பந்தமாக இதே சட்டமன்றத்தில் பேசிய குறிப்புகள் அனைத்தையும் என் கையில் வைத்திருக்கிறேன். அப்போது என்னென்ன பதில் சொன்னீர்கள், என்னென்ன விளக்கங்கள் சொன்னீர்கள் என்பது குறித்து எடுத்துச் சொல்வதற்கு எனக்கு நீண்ட நேரம் ஆகாது. ஆகவே, தேர்தலில் வாக்குறுதி கொடுக்கப்பட்டாலும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதலமைச்சர் அவர்களும் நடவடிக்கை எடுத்ததன் காரணமாகத்தான் 603 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்பதை பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக தெரிவிக்கிறேன். இவ்வாறு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குறிப்பிட்டார்.