சட்டப்பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது குறுக்கிட்டு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2.63 இலட்சம் கோடி வந்திருந்தால் நாம் கடன் சுமை குறைந்திருக்கும் என்று புள்ளி விவரங்களுடன் பதிலளித்தார்.
எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்று உறுப்பினர் சொல்லிக்கொண்டு வந்தார். நிதிப் பகிர்வைப் பொறுத்தவரை, அடுத்தடுத்து வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு நிதிக் குழுவும் தொடர்ந்து நமக்கான பங்களிப்பைக் குறைத்துக்கொண்டே வருகின்றன. ஒன்பதாவது நிதிக் குழுவில் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பகிர்வு விகிதம் 7 சதவீதமாக இருந்தது என்று சொன்னால், தற்போது பதினைந்தாவது நிதிக்குழுவில் நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய எண்ணிக்கை என்பது வெறும் 4.079 சதவீதமாக உள்ளது. அது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அதிகாரப்பகிர்வு–ல் நமக்கு சட்டபூர்வமான ஆக எவ்வளவு வரவேண்டுமோ அது குறைக்கப்பட்டிருக்கக் காரணத்தால், நமது கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ள காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2.63 இலட்சம் கோடி ரூபாய் இதுவரை நமக்கு வராமல் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. நமது மாநில அரசு வாங்கக்கூடிய கடன்தொகையில் இந்தத் தொகை மட்டும் சுமார் 32 சதவீதமாகும். அதாவது, 2.63 இலட்சம் கோடி ரூபாய். நிதிக்குழு நமக்கு இதனைக் கொடுத்திருந்தால், devolution–ல், நமக்கு கடன் அதிகமாக வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. நீங்கள் அங்கேயே அதனைத் தரவில்லை. நாட்டின் மக்கள்தொகையில் 6.1 சதவிகிதத்தைக் கொண்டி ருக்கக்கூடிய தமிழ்நாட்டுக்கு 4.07 சதவிகிதம் மட்டுமே கொடுக்கிறீர்கள்.
நிதிப் பங்கீட்டினைக் குறைவாகப் பெறக்கூடிய மாநிலங்களில், நாம் மூன்றாவது இடத்தில், மிகக் குறைவான இடத்தில் இருக்கிறோம். நீங்கள் ஒன்றிய அரசிடமிருந்து வரக்கூடிய நிதிப் பகிர்வையும் குறைக்கிறீர்கள்; மற்றொரு பக்கம், நமது ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களில் மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய மத்திய அரசின் பங்களிப்பையும் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகிறீர்கள் என்றார்..