நவ.24.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கோவையில் சந்தித்து கரூர் ஜவுளி தொழிலுக்கு தேவையான நூல் விலை, ஜிஎஸ்டி வரி பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், கரூர் வீவிங் நிட்டிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனபதி, கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் காளியப்பன் ஆகியோர் அளித்த கோரிக்கை மனு-.
தமிழகத்தை தொழில்துறையில் 2030ஆம் ஆண்டு ஒரு ட்ரில்லியன் எக்கானமி மற்றும் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற தாரக மந்திரத்தோடு தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் திட்டங்களை அறிவித்து அரசு எந்திரத்தை செயல்படுத்தி நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு கரூர் ஜவுளி துறை சார்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்த்துக்கள்.
4ஆயிரம் கோடி ஏற்றுமதி
வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் கரூர் நகரம் 4000 கோடிக்கும் மேலான வீட்டு உபயோக துணிகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து எக்ஸ்போர்ட் எக்ஸலண்ட் என்ற அங்கீகாரத்தை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. உள்நாட்டு உபயோகத்திற்கு தேவையான துணிகளை உற்பத்தி செய்து 4000 கோடிக்கும் மேலான வர்த்தகம் செய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஜவுளித் துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு லட்சம் தொழிலாளர்களின் நேரடி வேலை வாய்ப்பும் 5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கொடுக்கப்படுகின்றன. 8000 கோடிக்கு மேலான வர்த்தகம் செய்து வரும் கரூர் ஜவுளி துறை 2030ஆம் ஆண்டில் 25 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்ட பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தடையாகவும் தொழில் நசிந்து பல்லாயிரகணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலை உருவாகும் கீழ்க்கண்ட பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்துள்ளது.
வாய்பிருந்தும் சிக்கல்
நூல் விலை ஏற்றம் எந்த காரணமும் இன்றி ஒரு கிலோவிற்கு 50 ஏற்றம் கண்டுள்ளது. வருகிற ஜனவரி 2022 ஜெர்மன் பிராங்கபர்ட் நகரில் நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில் நமது இந்திய குறிப்பாக கரூர் ஏற்றுமதியாளர்களுக்கு சீனாவின் பொருளாதார மந்தநிலை காரணமாக மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. நூல் விலை ஏற்றத்தால் புதிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் நம் நாட்டிற்கு வராமல் போகலாம் எனவே நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
5 சதவீதத்தை 12 சதவீதமாக உயர்த்தும் ஒன்றிய அரசு
ஜிஎஸ்டி வரி துணிகளுக்கும், டையிங் பிரிண்டிங் மற்றும் பல ஜவுளித் துறை சார்ந்த தொழில்களுக்கு 5 சதவீதமாக இருந்தது வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி ஜவுளித் துறை சார்ந்த பொருட்களுக்கு 12 சதமாக உயர்த்தும் ஒன்றிய அரசின் அறிவிப்பு ஜவுளித்துறை ஒரு பேரிடி ஆகும். இதன் மூலம் உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். 10% அதிகப்படியான மூலதனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி அதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து நூல் விலையை குறைந்தது ஒரு கிலோவிற்கு 25 ரூபாய் குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மில்களுக்கு நூல் விலையை குறைக்கவும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு மாற்றாமல் கடைபிடிக்கவும் அறிவுறுத்த வேண்டும். ஜவுளி பொருட்களுக்கு வரி என வெளியிப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரி உயர்த்தும் அறிவிப்பை திரும்பப் பெறும்படி ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும். எனவே இத்தொழிலை காப்பாற்றவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கவும் ஆவண செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.