செப்.13.
கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் குப்பம் கிராமத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெகநாதன் புகார் தெரிவித்தார் .இதனைஅடுத்து குவாரி மூடப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கல்குவாரி உரிமையாளர் வாகனத்தை ஏற்றி ஜெகநாதனை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கல் குவாரிகள் முறைகேடு குறித்து தொடர்ந்து புகார்கள்அளித்து வந்த ஜெகநாதன் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மூன்றாவது நாளாக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் கோரி வந்தனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் இறந்த ஜெகநாதன் உடலை இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் எஸ் பி சுந்தரவதனம் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியது – கரூர் மாவட்டத்தை பொருத்தவரை சாதாரண கல் குவாரிகள் 85 குத்தகை உரிமம் பெற்றவை உள்ளன. அவற்றில் நடப்பில்உள்ளவை 62. கிரானைட் குவாரிகள்50 உரிமம் பெற்றவை நடப்பில் உள்ளவை எட்டு. சுண்ணாம்புக்கல் குவாரிகள் 3நடப்பில் உள்ளவை 1. மொத்தம் 180 குவாரிகள் உரிமை பெற்றவை அவற்றில் நடப்பில் உள்ளவை 76மட்டுமே. குவாரிகள் குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 194 வாகனங்கள் விதி மீறலில் ஈடுபட்டதால் அவை பறிமுதல் செய்யப்பட்டு 160 வழக்குகள் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கனிமங்கள் வெட்டி எடுத்தமைக்காக 9 குவாரிகளுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.3 குவாரிகள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதான் உண்மையான நிலை .மேலும் சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள் குறித்து தகவல் புகார்கள் தரப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஆர்வலர் மரணம் துரதிர்ஷ்டவசமானது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .நியாயமாகவும் நேர்மையாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களும் காவல்துறை மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் தங்களது முழு நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு குறித்து அரசு முடிவு செய்யும். மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பத்திற்கு ரூ.1லட்சம் குழந்தைகள் படிப்பதற்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் கூறுகையில், விசாரணை அதிகாரி மீது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அவரை மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நடந்த உடனே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சில குறைகள் கூறியுள்ளனர் எனினும் சந்தேகத்திற்கு இடம் அளிக்காத வகையில் விசாரணை அதிகாரியை மாற்றுவதற்கு எஸ்பி உறுதி அளித்துள்ளார்.