அக்.2.
கரூர் மாநகராட்சி – திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் ரூ.40.கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் முடிவுற்றது – மேற்படி பேருந்து நிலையம் 06.10.2025ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. அனைத்து பேருந்துகளும் 6 ம் தேதி முதல் புதிய பேருந்து நிலையத்தில் இயக்கப்படுகிறது.
கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில் 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 09.07.2025ம் தேதியன்று மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. புதியதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினை “A” வகுப்பு பேருந்து நிலையமாக 09.07.2025 முதல் ஓராண்டு காலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் 06.10.2025ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
மாநகராட்சி ஆணையாளர், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர்கள். வட்டார போக்குவரத்து அலுவலர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் தனியார் பேருந்துகள் முதலாளிகள் சங்கம் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி
பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய மார்க்கம்
1) கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடைய வேண்டும். மேலும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்போது சுக்காலியூர் ரவுண்டானா மற்றும் சேலம் ரவுண்டானா வழியாக பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
2) மதுரை மார்க்கமாக வரும் பேருந்துகள் சுக்காலியூர் ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடைய வேண்டும். மீண்டும் அதே வழியாக சேலம் ரவுண்டானா வழியாக சேலம் மற்றும் ஈரோடு செல்ல பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
3) திருச்சி மற்றும் திண்டுக்கல் (வழி குஜிலியம்பாறை ) மார்க்கமாக வரும் பேருந்துகள் திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடைய வேண்டும். மேலும் அதே வழியாக பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது என கரூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.