செப்.28.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.கலெக்டர் கூறியதாவது-
கரூர் மாநகராட்சி வேலுச்சாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வு 27.09.2025 அன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்வில் கூடியிருந்த மக்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததும், மேலும் நேற்றுவரை 39 நபர்களும், இன்றைக்கு ஒருவர் சேர்த்து 40 பேர் அந்தச் சம்பவத்தினால் இறந்ததும், அனைவருக்கும் மிகப் பெரிய துயரத்தை அளித்துள்ளது.
இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களையும் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைத்து துறை அலுவலர்களையும் முடுக்கி விட்டு, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்திட உத்தரவிட்டார்கள்.
அதனடிப்படையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்ட காயமடைந்தவர்கள் அனைவருக்கும் தீவிர உயர் சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்பட்டது.
இருப்பினும், சம்பவ இடத்திலிருந்து இறந்த நிலையில் 39 நபர்கள் கொண்டு வரப்பட்டனர். மேல்சிகிச்சை பெற்ற ஒருவரும் சேர்த்து மொத்தம் 40 பேர் இறந்த செய்தி மிகவும் துயரமான செய்தியாக உள்ளது. முதலமைச்சர் அவர்கள் இரவோடு இரவாக இந்த செய்திகளைக் கேள்விப்பட்டு, இறந்த குடும்பங்களுக்கு நிவாரணமும், காயம்பட்டு சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு நிவாரணமும் அறிவித்துவிட்டு, இரவோடு இரவாக திண்டுக்கல், திருச்சி மாவட்ட ஆட்சியர் கள் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கோவை மற்றும் மதுரையிலிருந்து கிட்டத்தட்ட 114 மருத்துவர்கள், 23 செவிலியர்கள் உட்பட மருத்தவக்குழுக்களையும் கரூருக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதேபோல், பிற மாவட்டங்களில் இருந்து தடயவியல் வல்லுநர்கள் 16 பேரும், நமது மாவட்டத்தில் உள்ள 4 பேரும் தொடர் பணிகளைச் செய்து வந்தார்கள். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் 220 மற்றும் 115 செவிலியர்கள் உட்பட பல்வேறு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் மருத்துவ சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பிற தனியார் மருத்துவமனைகளிலும் 110 நபர்கள் மருத்துவ சிகிச்சைபெற்று வந்தனர்.
இறந்தவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் ரூ.10 லட்சமும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும் அளித்து நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் அவர்களும் உடனடியாக கரூருக்கு வருகைதந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும், அவர்களுடன் இருப்பவர்களையும் பார்த்து ஆறுதல் தெரிவித்து, இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை மற்றும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இங்கும் மருத்துவமனையிலும் கட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டன. கட்டுப்பாட்டு அறையினை தொடர்கொள்ள 04324-256306, வாட்ஸ்அப் எண்7010806322 ஆகிய தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டன.
கூட்ட நெரிசலில் இறந்த 39 நபர்களுக்கும் அன்று இரவே பிரேதப் பரிசோதனை செய்து, உடல்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன. முதலமைச்சர் அவர்களின் உத்தரவுகள் மற்றும் ஆணை, துணை முதலமைச்சர் இங்கு வருகை புரிந்து கொடுத்த வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் மருந்துகள், மாத்திரைகள் வழங்கி, தீவிர உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர், மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி தெரிவிக்கையில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தடையிலாத மின்சாரம் வழங்கப்பட்டது. அனைத்துப் புகைப்படங்களிலும், சம்பவம் நடைபெற்றபோது தெருவிளக்குகள் மற்றம் கடைகளில் வெளிச்சமிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, உரையாற்றிக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது என்ற கருத்து திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டவர்களால் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர் மற்றும் ஃபோகஸ் லைட்டுகள், கூட்ட நெரிசலால் அணைக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, காவல் துறை தலைவர் மத்திய மண்டலம் (திருச்சி) ஜோஷி நிர்மல் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா உடனிருந்தனர்.