செப்.28.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் முன்னிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று (28.09.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியது:-
தமிழக வெற்றிக்கழக தலைவரின் பாப்புரைக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்ற தகவல் உண்மையானதல்ல. லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் அனுமதி கேட்டாங்க, அதுஒரு பயர் பிளேஸ். அந்த ரவுண்டானால ஒரு பக்கம் ஒரு பெரிய பெட்ரோல் பங்க். அடுத்த பக்கம் அமராவதி ஆறு. ஆற்றின் மீது பெரிய பாலம் உள்ளது அந்த இடத்தில் ஒரு அடர்த்தியான கூட்டத்திற்கான அனுமதி கொடுக்குறது மிக சிரமம். அவங்க ரொம்ப இன்சிஸ்ட் பண்ணி அடுத்தது கேட்டது உழவர் சந்தை பகுதி. இது கொஞ்சம் குறுகலான இடம். என்றபோது வேலுச்சாமி புரத்தில் அனுமதி கேட்டு அன்றைக்கே அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. பொதுவாகவே ஒரு இடத்திற்கு எவ்வளவு கூட்டம் வரும் என நாம் அனுமானிக்கின்றோமோ அதற்கு தகுந்தால் போல காவலர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்துவது வழக்கம்.
குறைவான கூட்டம் என்றால் சதுர அடிக்கு ஒரு காவலர். நகராமல் இருக்கும் கூட்டத்திற்கு ஆறு முதல் 7 சதுர அடிக்கு ஒரு காவலர். மிகவும் அடர்த்தியாக கூட்டம் கூடும் பகுதிகளில் 4 முதல் 5 சதுர அடிக்கு ஒரு காவலர்.
இதை கணக்கில் வைத்து 27ம்தேதி 500 காவலர்கள், கரூர் மாவட்ட எஸ். பி. மூன்று ஏடிஎஸ்பி, 17 ஆய்வாளர்கள், 58 உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 500 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். இவை அனைத்தும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் கண்காணிப்பில் இருந்தது.
திருச்சி மாநகரத்தில் கொடுத்திருந்த போலீஸ் பாதுகாப்பு காவலர்களுடைய எண்ணிக்கை 650. காரணம் ஒரு மாநகரம் விமான நிலையம் அடங்கிய பகுதி என்பதால். அடுத்ததாக அரியலூர் மாவட்டத்தில் காவலர்களுடைய எண்ணிக்கை 207, பெரம்பலூர் மாவட்டத்தில் 480. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 410. திருவாரூர் 413. நாமக்கல் 279 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நாமக்கல்லில் இதே மாதிரி ஹீட் ஸ்ட்ரோக் ஆகி சுமார் 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்ததாக சம்பவத்தன்று ஆம்புலன்ஸ் எங்கிருந்து வந்ததுன்னு கேட்டுருக்காங்க. பரப்புரைக்கு அனுமதி கொடுக்கும்போதே போதுமான அவசரஊர்தி வசதிகள் ஏற்பாடு செய்யணும்னு விதிமுறைகள் கொடுத்திருந்தாங்க. அதற்கு ஏற்றார் போல் அவங்களே வந்து காவலர் குடியிருப்புக்கு அருகில் இரண்டு அவசர ஊர்திகள் நிறுத்திவச்சிருந்தாங்க.
இந்த நிகழ்வுகள் நடந்து தெரிய வந்ததும் அமராவதி மருத்துவமனையில் இருந்து 10 அவசர ஊர்திகள் வரவழைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக தலைவர் தட்டுப்பாளையத்திலிருந்து கரூர் ரவுண்டானா வருவதற்கு அரைமணி நேரம். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஏற்கனவே நாமக்கல்லில் 12 மணி என கூறி 4 மணியானது.
கரூர் ரவுண்டானா வரும்போது மாலை 6 மணி ஆகிவிட்டது. பேசுற இடத்துக்கு வரும்போது சர்வீஸ் ரோட்ல இருந்து மக்களை பார்த்து கை அசைத்துவிட்டு வண்டிக்குள் போனதும் பின்னாடி வந்த கூட்டம் எல்லாமே அவர் வண்டிக்கிட்டே சேர்ந்து போனது. முனியப்பன் கோயில் தாண்டி பேசக்கூடிய இடம் வர 1மணி நேரம் ஆயிடுச்சி. அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்துல அங்க இருந்த கூட்டம் ரெண்டு பக்கமும் வரும்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது. காவல் துறை தலைவர் மத்திய மண்டலம் (திருச்சி) ஜோஷி நிர்மல் குமார், மாவட்ட எஸ். பி. ஜோஷ் தங்கையா, மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.