செப்.8.
கரூர் மாநகராட்சி காந்திகிராமம் டபுள் டேங்க் அருகில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு தனிப்பட்டா வழங்க மனுக்கள் பெறும் முகாமினை எம்எல்ஏ செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
செந்தில்பாலாஜி கூறுகையில், முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் சுமார் 40 ஆண்டு காலமாக குடி இருக்க கூடியவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதற்கான மனுக்களை பதிவு செய்வதற்கான பணியினை தொடங்கி இருக்கிறோம். பதிவு செய்யக்கூடிய மனுக்கள் உரிய ஆவணங்களோடு சரிபார்க்கப்பட்டு 15 தினங்களுக்குள் உரியவர்களிடம் அதற்கான வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக பட்டா என்றால் தாமாகவே முன் வந்து முயற்சி எடுப்பீர்கள். இந்த முறை அரசே முன் வந்து தங்களுடைய பகுதியில் முகாமிட்டு அதற்கான அனைத்து பணிகளையும் மேற்க்கொள்ள இங்கேயே முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1466 குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கும் தெரிவித்து முகாமில் கலந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்ஏ சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர்கவிதா. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்.முகமது பைசல், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, தாசில்தார் குமரேசன் கலந்து கொண்டனர்.