ஆக.31.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2நாட்கள் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ஜோதி வரவேற்புரையாற்றினார். கரூர் திருவிக மன்ற மேலாண்மை குழு உறுப்பினர் எழுச்சி கவிஞர் கோ. செல்வம், பயிலரங்கில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், மொழி அழியாமல் இருந்தால்தான் சமூகம் சிறப்பானதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் தாய் மொழி பற்று அவசியம். நமது தாய் மொழியான தமிழ் மொழியை அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றவர்கள் எல்லாம் தமிழை மீட்டு எடுத்து மேன்மை அடையச் செய்தனர். சுதந்திர போராட்டத்தின் போது பாரதியார், பாரதிதாசன் போன்றோர் தமிழால் அனைவரிடமும் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினர். சென்னை மாகாணம் என்றிருந்ததை தமிழ்நாடு என பெயர் சூட்டி மொழியின் தன்மையை பறைசாற்றினார் பேரறிஞர் அண்ணா.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ் வளர்ச்சி இயக்ககம், அகர முதலி திட்ட இயக்கம் என ஏற்படுத்தி தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பாடுபட்டு வருகின்றது. அரசு அலுவலகங்களில் கடிதங்கள், குறிப்புகள், வரைவுகள் , எழுத தமிழ் ஆட்சி மொழி அகராதியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கவிஞர் பேசும்போது குறிப்பிட்டார். வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பேசினர். திருமூர்த்தி நன்றியுரை கூறினார்.