செப். 24.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு தினம்’ நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கலெக்டர் பேசுகையில், முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் பசுமை நிலப்பரப்பை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக நெகிழி இல்லா தமிழ்நாட்டை உருவாக்கி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக “மீண்டும் மஞ்சப் பை” திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். 1450 நாவல் மரக் கன்றுகள் வனத்துறையினரால் நடவு செய்யப்பட உள்ளது. இன்று 250 நாவல் மரங்களை அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடப்பட உள்ளது.
கரூர் மாவட்டத்தின் மொத்த புவியியல் பரப்பளவு சுமார் 2904 சதுர கி.மீ ஆகும். மாவட்டத்தின் வனப் பரப்பளவு 6720.81 ஹெக்டேர். தமிழ்நாட்டிலேயே மிகவும் குறைவான வனப்பரப்பளவை கொண்ட மாவட்டமாக கரூர் இருந்தாலும், வனம் மற்றும் காடுகள் இல்லாத பகுதிகளில் பசுமை நிலப் பரப்பை அதிகரிக்க கடந்த 3 ஆண்டுகளில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் 23,36,303 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
வனத்துறையினரால் 12,68,762 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 6.24 ச.கி.மீ அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டு இந்திய வன நிலை அறிக்கையில் மேலும் அதிகரிக்கக்கூடும். 2025-26 ஆம் ஆண்டு மாவட்டத்தின் மரக்கன்றுகள் நடுவதின் இலக்கு 9,77,255 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
வனத்துறையினரால் மட்டும் 4,38,500 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்பது மூலம். பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் இதில் ஈடுபட்டு. ஒவ்வொரு மரமும் நம்பிக்கையின் அடையாளமாகவும். பூமியின் பாதுகாப்பிற்கு பங்களிப்பாகவும் இருக்க வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மாவட்ட வன அலுவலர் சண்முகம் கல்லூரி முதல்வர் முனைவர் உஷா ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.