கரூர்.நவ.9.
கரூர் விஷன் 2030- வளரும் கரூர் என்கிற முன்னெடுப்பில் ரூ. 50 ஆயிரம் கோடி உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நவ. 9ம்தேதி நடைபெற்றது. கரூர் திருவள்ளூர் மைதானத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். சிஐஐ. யங் இந்தியன்ஸ், உள்ளிட்ட அனைத்து வர்த்தக அமைப்புகளும் இணைந்து இதனை நடத்தின.
போட்டிகளை தொடங்கி வைத்து கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி பேசியதாவது:-
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 11.19% என உயர்த்தி, இந்தியாவிலேயே முதன் மாநிலமாக்கிய தொழில் முனைவோர்களின் தோழனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனவும் லட்சியமுமான, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம், ஒன்டிரில்லியன் டாலர் என வளர வேண்டும் எனும் உயரிய இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
‘கரூர் விஷன் 2030’ ஐம்பதாயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இலக்கு என்கிற முன்னெடுப்பில், அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இணைந்து இப் போட்டிகளை நடத்தியுள்ளன. நம்ம கரூர் வளரும் கரூர் நோக்கி வெற்றி நடை போடுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எப்போதும் துணை நிற்கின்றனர்.
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக உயர்த்திடுவோம். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போட்டிகளில் கடந்த ஆண்டைவிட சிறப்பாக பங்கேற்றுள்ளனர். இன்னும் வரும் ஆண்டுகளில் இதைவிட சிறப்பாக நடைபெறும். நம் முன்னோர் உருவாக்கிய கரூரை இளம் தலைமுறையினர் கையில் எடுத்து வரும் தலைமுறையினருக்கு உணர்த்திடும் வகையில், பங்கேற்க செய்யும் வகையில், சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர். நம்முடைய மண்ணின் வளர்ச்சிக்காக கரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எந்நாளும் துணை நிற்பேன்.
இவ்வாறு செந்தில் பாலாஜி பேசினார்.
கரூர் மாவட்ட கலெக்டர் மீ. தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகள் அதிகாரிகள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.














