கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஐ.ஓ.பி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான ஆண்டறிக்கையினை கலெக்டர் தங்கவேல் வெளியிட்டார்.
கரூர் மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற இளைஞர்களுக்கு (18-45 வயதுக்குட்பட்ட) உற்பத்தி, சேவை மற்றும் விவசாயம் சார்ந்த திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு. அதன்மூலம் அவர்களுக்கான சுய வேலை வாய்ப்பினை அவர்களே உருவாக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கான உபகரணங்கள், எழுதுப் பொருட்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சி நிறுவனத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தையல் மற்றும் அழகுக்கலை பயிற்சிகள். ஆரி எம்பிராய்டரி பயிற்சி, செல்போன் சர்வீஸ் பயிற்சி, சீசிடிவி சர்வீஸ் பயிற்சி, எலக்ட்ரீசியன் பயிற்சி, வயரிங், மின் சாதனங்கள் பழுது நீக்குதல் பயிற்சி, கொத்தனார் பயிற்சி, இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதல் பயிற்சி, காளான் வளர்ப்பு, ஆடு,மாடு,கோழி வளர்ப்பு பயிற்சிகள், காய்கறி சாகுபடி, மலர் சாகுபடி, மருத்துவ தாவரங்கள் வளர்ப்பு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் 2011ம் ஆண்டு முதல் 10.000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதில் 6200க்கும் மேற்பட்ட நபர்கள் சுயமாக தொழில் தொடங்கி உள்ளனர். கடந்த 2024-25ம் நிதி ஆண்டில் 1081 நபர்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் விவசாயம் சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டதில் 748 நபர்கள் சுயமாக தொழில் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம். 191/2. இரண்டாம் தளம், கோவை ரோடு, கரூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04324 248816. 6379 527 550 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்தார்.
ஐ.ஓ.பி முதன்மை மண்டல மேலாளர் திருமுருகன், ஐ.ஓ.பி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் திவ்யா, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் வசந்த குமார் கலந்து கொண்டனர்.