ஆக.28.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அங்கேரி தலைநகர் புடா பெஸ்டில் கடந்த கடந்த 19-ந்தேதி தொடங்கி, கடைசி நாள் போட்டிகள் நடைபெற்றது. 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்து மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 28 பேர் (23 வீரர்கள், 5 வீராங்கனைகள்) 15 பிரிவில் பங்கேற்றனர்.
நீரஜ் சோப்ரா தங்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் 88.17 மீட்டர் தூரம் எறிந்தார். அவர் தனது 2-வது வாய்ப்பில் இதை எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். 25 வயதான நீரஜ் சோப்ராவின் முதல் வாய்ப்பு பவுலாக அமைந்தது. 3-வது வாய்ப்பில் 86.32 மீட்டரும், அதைத்தொடர்ந்து 84.64 மீட்டரும், 87.73 மீட்டரும், 83.98 மீட்டரும் எறிந்தார். பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கமும், செக்குடியரசுவை சேர்ந்த ஜாகுப் வேட்லெஜ் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்
இதுதொடர்பாக நீரஜ்சோப்ரா கூறியதாவது:- நள்ளிரவு வரை தூங்காமல் எனது போட்டியை ஆவலுடன் பார்த்த இந்திய மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தங்கப் பதக்கம் இந்திய மக்களுக்கானது. நான் ஒலிம்பிக் சாம்பியன். தற்போது உலக சாம்பியன். தொடர்ந்து பல்வேறு துறைகளில் கடினமாக உழைக்க வேண்டும். உலகில் பெயர் எடுக்க வேண்டும்.
போட்டிக்கு முன்பு நான் எனது செல்போனை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்றார்.
ஈட்டி எறிதலில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா 5-வது இடத்தையும் (84.77 மீட்டர்), டி.பி.மானு 6-வது இடத்தையும் (84.14 மீட்டர்) பிடித்தனர்.