பிப்.7.
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரியாவை ஒட்டிய துருக்கி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பூகம்பம், இரு நாடுகளிலும் பெருத்த உயிர் மற்றும் பொருட் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,534 ஆகவும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் துணை அதிபர் ஃபாட் ஒக்தே தெரிவித்துள்ளார். திங்களன்று அதிகாலை நேரிட்ட முதல் பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து, மேலும் இரண்டு பூகம்பங்கள் நேரிட்டன. அதோடு, 200-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) நேரிட்ட 4-வது நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
தொடர் பூகம்பங்கள், நில அதிர்வுகளாலும், உரைய வைக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் ஃபரத்தீன் கோக்கோ தெரிவித்துள்ளார்.
5600 கட்டிடங்கள் தரைமட்டம்: பூகம்பத்தால் உலுக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் 5,600 கட்டிடங்கள் தரைமட்டமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பல கட்டிடங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.