கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் லட்டர் .. எனத் தொடங்கும் பாடல் கமலஹாசன் குரலில் இசைஞானி இசையில் ஹிட்டானது. கதைப்படி குணா மனநலபிறழ்வு கொண்டவர். அவரது அணுகுமுறை இயல்பான வடிவில் இருக்கமுடியாது என்பதால் நினைப்பதை அப்படியே சொல்ற மாதிரி பாட்டு வேண்டும் என்ற கமலின் வேண்டுகோளை ஏற்று இசைஞானி உருவாக்கிய பாடல்தான் கண்மணி அன்போடு காதலன் பாடல்.
அங்கங்க. மானே தேனே பொன்மானே. சேத்துக்கோ.. அது என்ன மாயமோ தெரியல எனக்கு உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போகும் மாயம் என்ன பொன் மானே.. எந்த காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்… தாங்காது.. உன் மேனி செந்தேனே… எந்தன் சோகமும் உன்னை தாக்கும் என்றென்றும் போது அழுகை நின்றது. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது… என்று இந்தப் பாட்டில் வரும் கவிஞரின் இவ்வரிகள். இசை படமாக்கப்பட்ட விதம் கமலின் நடிப்பு எல்லாம் சேர்ந்த கலவையாக சூப்பர் ஹிட் . அடித்து 33 வருடங்களாக நிலைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகி உள்ள இயக்குநர் சிதம்பரத்தின் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் ஹிட்டாகி வசூலையும் வாரிக் கொண்டிருக்கிறது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மஞ்சுமெல் பகுதியிலிருந்து நண்பர்கள் குழுவாக கொடைக்கானலுக்குச் சுற்றுலா போகின்றனர். எல்லா இடங்களையும் பார்த்துசுற்றித் திரியும்போது குணா குகையை பார்க்க வேண்டும் என அங்கு செல்கின்றனர். எதிர்பாராத வண்ணம் விபத்தில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதை படமாக்கி உள்ளனர். குகையின் பாறை இடுக்கில் உள்ள ஒரு 900 அடி பள்ளத்தில் ஒரு நண்பர் விழுந்து விடுகிறார். அவரை மீட்கும் போது நடைபெறும் சம்பவங்கள் மீண்ட பின்பு ஒலிக்கும் கண்மணி .. பாடல் ஆகியவை கைத்தட்டல் பெறுகின்றன.
படத்தின் முதல் பாதி சுற்று உலா இரண்டாம் பாதி இக்கட்டான சூழலை எதிர்கொள்ள தேவையான மன உறுதியை கையாண்டிருக்கிறார். கதாபாத்திரங்கள் தத்தமது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். ஸ்ரீநாத் பாஷி, சவுபின் ஷகிர் இருவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சைஜு காலித்தின் கேமிராவும் அஜயன் சலிஷேரியின் கலை இயக்கமும் பிரமிப்பு.
சஷின் ஷியாமின் பின்னணி இசையும் விவேக் ஹர்ஷனின் கட்ஸும் ஹைலைட். தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என இந்த படமே தொடங்குகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் வருவது- முக்கியமான சீனில் பாடல் இடம்பெறுவது பொருத்தமாக அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்ற தகவல்கள்’மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தினை மேலும் ஹிட்டாக்கி வசூலை குவித்து வருகிறது.