பிப்.10.
சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதி மகனும், மாமன்ற உறுப்பினருமான பரிதிஇளம்சுருதி – டாக்டர் நந்தினி (எ) கனிஷ்கா ஆகியோரது திருமணத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து, உரையாற்றினார். முதலமைச்சர் பேசியது –
இன்றைக்கு டில்லியில் பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற, ராஜ்ய சபாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று செய்தி எல்லாம் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு அவர்கள் நாடாளுமன்றத்திலே எடுத்து வைக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்களா?. சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி விளக்கமாக பேசி அதை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறார். பதில் இல்லை. வருஷத்துக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம் என்று சொல்லிதான் பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தார். என்ன ஆச்சு? என ஒரு கேள்வி கேட்கிறார். பதில் இல்லை.
வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை எல்லாம். நான் கைப்பற்றுவேன், அப்படி கைப்பற்றி அதைக் கொண்டு வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 இலட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் போடுவேன். நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? 15 இலட்சம் வேண்டாம், 15 ஆயிரம் ரூபாய், 15 ரூபாயாவது போட்டிருக்கிறார்களா? இல்லை.
அதேபோல நம்முடைய நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவராக இருக்கக்கூடிய அருமை தங்கை கனிமொழி அவர்கள், கேட்கிறார், எய்ம்ஸ் என்ன ஆச்சு? 2021 பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். அதற்கு பிறகு பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களே மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு போயிருக்கிறார். இதுவரைக்கும் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. ஒருசெங்கலை வைத்து நம்முடைய தம்பி உதயநிதி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த செய்தி எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதற்கு பிறகுகூட வெட்கம் வந்திருக்க வேண்டாமா?. மறுபடியும் பாராளுமன்ற தேர்தல் வருமே, தம்பி இன்னொரு செங்கலை எடுத்து கிளம்பிடுவானே என்ற பயம் வர வேண்டாம். இந்த நிலையில், கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒன்றுக்கும் பதில் இல்லை.
அதேபோல ஆ.ராசா அவர்கள் கேள்விக் கணைகளை தொடுக்கிறார். பதில் இல்லை. தம்பி தயாநிதி மாறன் ரொம்ப வேதனையோடு வந்து வெளியில் சொல்லுகிறார். நாடாளுமன்றத்தில் “கோரமே” இல்லை. மோடி பேசியவுடன் அத்தனை பேரும் போய்விட்டார்கள். அதேபோல சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென்று சட்டமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றியிருக்கிறோம். அதனால் எண்ணற்ற பேர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகக்கூடிய கொடுமைகள் தினம் தினம் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி கேட்டால் எது எதற்கோ விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல மாநிலங்கவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் ரொம்ப அழுத்தந்திருத்தமாக உப்புமாவையே அடையாளம் காட்டி பேசினார். இப்படிப்பட்ட நிலையிலேதான், இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு எப்படி 2021ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, 2024-ல் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித் தரக்கூடிய ஒரு நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள், தயாராக இருங்கள் என்று கேட்டு, மணமக்களை நான் வாழ்த்துகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.