மார்ச்.4.
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளுக்கு நேற்று தலைவர் தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சி ஜெயந்தி, உப்பிடமங்கலம் திவ்யா, கிருஷ்ணராயபுரம் சேதுமணி, நங்கவரம் ராஜேஸ்வரி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சௌந்தரப்ரியா புஞ்சை தோட்டக்குறிச்சி ரூபா முரளிராஜா, மருதூர் சகுந்தலா ஆகியோர் திமுக பேரூராட்சித் தலைவர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். புலியூர் பேரூராட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே உறுப்பினரான கலாராணி சேர்மன் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக உறுப்பினர் புவனேஸ்வரி புலியூர் பேரூராட்சி சேர்மன் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
சேர்மன் மாற்றம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது. மொத்தம் 15 உறுப்பினர்கள் இதில் 14 பேர் ஆஜராகியிருந்தனர். புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை உறுப்பினர்கள் முன்மொழிந்தும் வழிமொழிந்தனர். வேறு யாரும் மனு செய்யாததால் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கலாராணி கூட்டத்திற்கு வந்திருந்தார். அவர்கள் வேட்பு மனுபெறவில்லை. எதுவும் கூறவில்லை என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறுகையில் , எங்கள் கட்சிக்கு ஒரே உறுப்பினர் கலாராணி வெற்றி பெற்றுள்ளார் . அவருக்கு தலைவர் பதவியை பெருந்தன்மையுடன் கூட்டணி தர்மப்படி அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு கலாராணி சேர்மனாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் திமுகவை சேர்ந்தவர் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரே உறுப்பினரான நாங்கள் என்ன செய்ய இயலும். இது குறித்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்றனர்