ஜன.22.
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் பெரியகுளம் உள்ளது. இங்கிருந்து உபரி நீர் வெள்ளியணை குளத்திற்கு வாய்க்கால்கள் மூலம் வந்து சேர்கிறது. குடகனாறு சீரமைத்து நீர் வரத்து காரணமாக வெள்ளியணை பெரியகுளம் நிரம்பியது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளத்திலிருந்து வெள்ளியணை, உப்பிடமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பாசனத்திற்கு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். சுமார் 330 ஏக்கர் இதனால் பாசன வசதி பெறும்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,
வெள்ளியணை ஏரி முழுமையாக சுத்தம் செய்யப்பட்ட பின்னர் கரைகள் அமைக்கப்படும். வெள்ளியணை பஞ்சப்பட்டி ஏரி சீரமைப்புக்கு கூடுதல் நிதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாதம்பாளையம் பஞ்சப்பட்டி உள்ளிட்ட பெரிய ஏரிகளுக்கு உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது . . 15 கோடி மதிப்பீட்டில் தாதம்பாளையம் ஏரி சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் மூலம் கருத்துரு அனுப்பி வனத்துறைக்கு வேறு இடம் அளிக்கப்பட்டு முழுவதுமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்படும் என்றார்.
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் சிவகாம சுந்தரி, மாணிக்கம், இளங்கோ, தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.