மார்ச்.2.
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. ஒரு உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மீதமுள்ள 47 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா புதிய கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் . மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உறுப்பினர்கள் பதவி ஏற்று முடிந்ததும் அவர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் 8 பேரூராட்சிகளின உறுப்பினர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
4ம்தேதி முதல் பெண் மேயர்
நகராட்சியாக இருந்த கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தல் நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கு பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்கான மறைமுக தேர்தல் வரும் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. மாநகராட்சியின் முதல் பெண் மேயர் அன்று தேர்வு செய்யப்பட உள்ளார்.
3நகராட்சி, 8பேரூராட்சிகளுக்கு சேர்மன்
மேலும் குளித்தலை, பள்ளபட்டி, புகழூர் நகராட்சி தலைவர் மற்றும் அரவக்குறிச்சி, பு.தோட்டக்குறிச்சி ,புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், நங்கவரம், மருதூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிகளுக்கு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது . மேலும் துணைமேயர் நகராட்சி துணைத்தலைவர், பேரூராட்சி துணைத்தலைவர் பதவி இடங்களுக்கும் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.