டிச.2.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மன நலம் பாதித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர்கள் அவருக்கு உணவு உடை அளித்து ஆதரித்தனர். தேசிய நெடுஞ்சாலை சாலை தடுப்பில் போய் உட்கார்ந்து இருப்பார்.
இதைப்பார்த்த சிலர், நாகம்பள்ளி பிரிவு சாலை ஓரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்க குடிசை அமைத்து இருப்பிட வசதி செய்து கொடுத்தனர். இதைக்கண்ட சிலர் அவரை சித்தர் என மாற்றி நிர்வாண சித்தர் என பெயர் வைத்தனர். ஆடையின்றி உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டு இருந்தார். நிர்வாண சித்தரைப் பார்க்க கூட்டம் வரத்தொடங்கியது . உடனே சமூக வலைதளங்களில் நிர்வாண சித்தர் பற்றிய தகவல்களை பரப்பி விட்டனர். சித்தர் என்று வருவோரிடம் உண்டியல் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், ஊர் மக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தனர். மேலும், அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அவரை மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் புகார் அளிக்கப்பட்டது.
மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர், அரவக்குறிச்சி டிஎஸ்.பி மற்றும் போலீசார் இன்று வந்து நடவடிக்கையில் இறங்கினர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடல்நலம் பாதித்த நிலையில் இருந்த “அரளி சித்தர்” என்று அழைக்கப்படும் சுப்பிரமணியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது.
நிர்வாண சித்தர் என்ற பெயரில் வசூல் செய்து வந்த சம்பவத்திற்கு விபூதி அடித்ததை போல முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.