டிச.11.
இந்தியாவில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை டாக்டர் கிரோடிலால் அறிமுகப்படுத்தியதை எதிர்த்து, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., மாநிலங்கள் அவையில் பேசியது:-
இந்தியா பல மதங்கள், பல நம்பிக்கைகள், பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. எனவே, இது ஒரு நாடு அல்ல; பல தேசிய இனங்களைக் கொண்ட கூட்டமைப்பு …(குறுக்கீடுகள்)…
பிரகாஷ் ஜவடேகர்: இல்லை; இல்லை, ஒரே நாடு. …(குறுக்கீடுகள்)…
வைகோ: இல்லை, இது என் பார்வை. என் கருத்தைத் தெரிவிக்க எனக்கு உரிமை உண்டு.
பிரகாஷ் ஜவடேகர்: எங்களுக்கு எங்கள் பார்வை உள்ளது. …(குறுக்கீடுகள்)…
வைகோ: தேசபக்தி என்பது உங்களது ஏகபோக உரிமை அல்ல. உங்கள் அதிகப்படியான பெரும்பான்மையால், அனைத்தையும் அழித்துவிட முடியாது. …(குறுக்கீடுகள்)..
அவைத் தலைவர்: உங்கள் இருக்கைக்குச் செல்லுங்கள். …(குறுக்கீடுகள்).. உங்கள் இருக்கைக்குச் செல்லுங்கள்.
திருச்சி சிவா: அவர்கள் பேசவில்லை என்றால், நாங்களும் பேச மாட்டோம்.
அவைத் தலைவர்: சரி. இருக்கைக்குச் செல்லுங்கள். ..(குறுக்கீடுகள்)..
திருச்சி சிவா: இல்லை, இல்லை. அவைத் தலைவருக்கு நாங்கள் கீழ்ப்படிகிறோம். …(குறுக்கீடுகள்)..
அவைத் தலைவர்: இருக்கையில் அமருங்கள். …(குறுக்கீடுகள்)..
வைகோ: உங்களுக்கு அதிகப் பெரும்பான்மை இருப்பதால்..(குறுக்கீடுகள்)…
அவைத் தலைவர்: இருக்கையில் அமருங்கள். …(குறுக்கீடுகள்)..
திருச்சி சிவா: அவைத் தலைவருக்கு மரியாதை தருகிறோம். …(குறுக்கீடுகள்)..
அவைத் தலைவர்: அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். …(குறுக்கீடுகள்)..
வைகோ: நாங்களும் உங்களுடன் பேசலாம். …(குறுக்கீடுகள்)..
அவைத் தலைவர்: இருக்கைக்குச் செல்லுங்கள். …(குறுக்கீடுகள்)..)
உறுப்பினர்: அவைத் தலைவரை நாங்கள் மதிக்கிறோம் என்பதாலேயே அமைதி காக்கிறோம். …(குறுக்கீடுகள்)..
வைகோ: பொது சிவில் சட்டத்தை எந்தெந்த கட்சிகள் ஆதரித்தன, யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்பது வருங்கால தலைமுறைக்குத் தெரிய வேண்டும். அதற்கு டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
நாடாளுமன்ற விதிகளின்படி, ஒரு உறுப்பினர் டிவிஷன் கேட்டாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டிதுதான் கட்டாயமாகும்.
அவைத் தலைவர்: வைகோ அவர்களே, உங்கள் வேண்டுகோளின்படி டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதன்படியே வாக்கெடுப்பு நடந்தது.
அவைத் தலைவர்: இருக்கைகளில் அமருங்கள். வைகோ மட்டும் பேசட்டும். முக்கியமான இந்தப் பிரச்சினையில் வைகோ தனது கருத்தை இந்த நேரத்தில் தெரிவிக்கட்டும். கிளர்ச்சியடைய வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அவர் தனது கருத்தைத் தெரிவிக்க முழு உரிமையும், பாதுகாப்பும் உள்ளது. மேலும், அவர் பேசும் போது யாரும் அவருக்கு இடையூறு செய்யக் கூடாது. உங்கள் வாய்ப்பு வரும்போது மட்டுமே நீங்கள் உங்கள் நிலையை எடுத்து வைக்க அனுமதிக்கப்படுவீர்கள்.
வைகோ அவர்களே, நீங்கள் பேசலாம்.
வைகோ: அவைத் தலைவர் அவர்களே, எனது கருத்துக்களை தெரிவிக்க அனுமதித்த தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் தங்களது செயல் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வருகின்றனர். காஷ்மீரை முடித்துவிட்டார்கள். இப்போது அவர்கள் பொது சிவில் சட்ட மசோதாவைக் கொண்டுவந்துள்ளனர். அப்படியானால், நாம் எங்கே செல்கிறோம்? பேரழிவை நோக்கியும், சிதைவை நோக்கியும் இந்தியாவை இட்டுச் செல்கின்றனர்.
இச்சட்டம் வந்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பவார்கள். அவர்களின் உணர்வுகள் முற்றிலும் அழிந்துவிடும். எனவே, தயவு செய்து இந்த மசோதாவை இன்று அறிமுகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பெரும்பான்மை கிடைக்காது என்பதால், கடந்த முறை கைவிட்டுவிட்டார்கள். இந்த முறை அவர்களுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. எனவே, தற்போது திணிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இது இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்த வழிவகுக்கும். இது அவமானகாரமான துக்க நாள். நான் மிகவும் வருந்துகிறேன். இந்தா மசோதா அறிமுகம் ஆகாமல் தடுக்க வேண்டும் என்றார்.