ஜூன்.18.
உழவுக்கு துணை நிற்கும் காளைகளுக்கும் – தமிழர்களுக்குமான உறவின் அடையாளமாகவும், பாரம்பரிய வீர விளையாட்டாகவும் திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பெற்று தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி, ஜல்லிக்கட்டு பேரமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் இன்று நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அமைச்சர்கள் கே என். நேரு, ரகுபதி, மெய்யநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, அன்பில் மகேஷ்பொய்யா மொழி, பெரியகருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர்’ மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நம் பண்பாட்டை காக்கும் தீர்ப்பை, சட்ட போராட்டத்தால் பெற்று தந்த நம் முதலமைச்சரை போற்றும் விதமாக, பிரம்மாண்ட மாநாட்டினை நடத்தி அன்பை வெளிப்படுத்திய ஜல்லிக்கட்டு அமைப்புகளுக்கு என் நன்றி. தமிழ்நாட்டின் தன்மானத்தைக் கழக அரசு என்றும் காத்து நிற்கும். எல்லோரும் அதிமுகவினரைப்போல் இருக்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் தான் ஜல்லிக்கட்டு போராட்டம். அதிமுக அந்த போராட்டத்தை ஒடுக்க நினைத்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே முழு ஆதரவை கொடுத்தவர் தான் நமது முதலமைச்சர்.
குடியரசு தலைவர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பாஜகவை பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள். இதுதான் அவர்களின் சனாதன மாடல். மனிதர்கள் எல்லோரும் சமம் என்று சொல்லும் திராவிட மாடலையும் திமுகவையும் கண்டால் அவர்களுக்கு எப்படி பிடிக்கும்?. ஒரு மாநிலத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அம்மாநில மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு செங்கோல் நடுவதாக கிளம்புகிறீர்கள் அல்லது அமலாக்கத்துறை வருமானவரி துறையை அனுப்புகிறீர்கள்.
இதனால் தமிழ்நாட்டில் ஓட்டு போடுவாங்க என்று யார் சொன்னது என்று தான் தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு ஒருத்தர் வந்திருக்கிறார் அவருக்குள்ள வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும். மனிதர்களை இவர் தாழ்ந்தவர் இவர் உயர்ந்தவர் என்று சொல்கின்ற சனாதனத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மாநிலத்துக்கெல்லாம் கலாச்சாரமே இல்லை என்று கதை விடுகிறார். குழந்தை திருமணத்தை ஆதரித்து தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துக் கொண்டு இருக்கிறார். அடிமையாவதற்கு நாங்கள் ஒன்றும் அதிமுக இல்லை. திமுக இல்லையென்றால் தமிழ்நாட்டை எளிதாக அபகரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. திமுக பல லட்சம் தொண்டர்களின் ரத்தத்தால் வியர்வையால் உருவான இயக்கம். ரைடு விட்டு சோதனை நடத்தி அடிமையாக நாங்கள் ஒன்றும் அதிமுக இல்லை.
மோடிக்கும் பயப்பட மாட்டோம். இ.டி.க்கும் பயப்பட மாட்டோம். எத்தனை மோடிகள். எத்தனை அமித்ஷாக்கள், எத்தனை ஜி.க்கள் வந்தாலும் அசைக்க முடியாது. ஜல்லிக்கட்டு வெற்றி உங்களின் வெற்றி. தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமை உணர்வு தான் மூடப்பட்ட ஜல்லிக்கட்டு வாடி வாசலை திறக்கச் செய்தது என்றார்.