டிச.8.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சின்னகவுண்டன் வலசை பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன்(65). இவர், கரூர் மாவட்டம், தென்னிலை கூனம்பட்டியில் கல் குவாரி நடத்தி வந்தார். கடந்த 6 ஆம் தேதி, சாமிநாதன் கல்குவாரிக்கு சென்ற அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லாததால் குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். அவரது மருமகன் முருகேசன் குவாரிக்குச் சென்று பார்த்தபோது பைக் நின்றது அவரைக்காணவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியை காணவில்லை. லாரியை தேடியபோது, முருகேசனின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாய்ஸ் மெசஜ் வந்துள்ளது, அதில், தன்னை ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தி செல்வதாக சாமி நாதன் பேசி அனுப்பி இருந்தார்.உடனடியாக மருமகன் முருகேசன் தனது மாமனார் சாமிநாதனை ரூ.1 கோடி கேட்டு சிலர் க்டத்தியதாகவும், தங்கள் குவாரியில் இருந்த லாரியையும் காணவில்லை என தென்னிலை போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி முத்து செல்வன் தலமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில், சாமிநாதன் செல்போன் டவரை வைத்து போலீசார் தேடினர். அது சேலம், தலைவாசல், தேவியக்குறிச்சி அரசு மறுவாழ்வு இல்லம் அருகில் உள்ள காட்டுப்பகுதியை காட்டியதால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துச் சென்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு இருந்ததால் அவர்களுடன் சேர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்
டவர் காட்டிய இடத்தில் காணாமல் போன டிப்பர் லாரி நின்றுக் கொண்டிருந்தது. அங்கு லாரிக்கு அருகில் டிப்பர் லாரி டிரைவர்கள் விஜய் (25) மற்றும் நவீன் (21) இருந்தனர். ஆனால் சாமிநாதனைக் காணவில்லை. அவர்களைப்பிடித்து விசாரித்தபோது சாமிநாதனை பார்க்கவில்லை லோடு ஏற்ற வந்தோம் என முன்னுக்கு பின் முரணாக உளறினர்.ஆனால் சாமிநாதனின் செல்போன் சிக்னல் லாரியை ஒட்டியே காண்பித்ததால் போலீசார் லாரியில் ஏறி ஆய்வு செய்தபோது லாரி ஓட்டுநர் சீட்டுக்கு பின்புறம் ஓய்வெடுக்கும் பகுதியில் உள்ள பெட்டிக்குள் அவரது உடலை மறைத்து வைத்திருந்தைக் கண்டுபிடித்தனர். உடனடியாக அவரது உடலை மீட்டு, லாரி டிரைவர்களை பிடித்து விசாரித்த போது சாமிநாதனைக்கொன்று அவரது உடலைக் காட்டுப்பகுதியில் எரிக்கலாம் என்று எடுத்து வந்தபோது சிக்கிக்கொண்டது தெரியவந்தது. கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பணம் தராமல், சாமிநாதன் போலீசில் புகார் கொடுத்ததால் கோபத்தில் அவரைக்கொன்று அவரது உடலை எரிக்க முயற்சித்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.