திருப்பரங்குன்றம் மலையை பார்த்திராத பலருக்கும் முருகன் கோயில் இருக்கும் இடத்தில் எப்படி இசுலாமியர் வழிபாட்டு தளம் இருக்கலாம் என கேட்கின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு வழிபாட்டுத் தளமும் வெவ்வேறு திசையில் இருக்கிறது என்பதை இப்படத்தை பார்த்தால் ஓரளவுக்கு புரியும். மத நல்லிணக்கத்திற்கு சான்றாக சபரிமலையில் வாவர் மசூதி இருப்பது போல, பிரான்மலையில் சேக் அப்துல்லா தர்கா இருப்பது போல முருகன், சமண, சைவ, வைணவ, நாட்டார் மரபுகள் என பல்வேறு சமயத் தளங்களோடு திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ளது.
- சுப்ரமணியர் கோயில் (சிவனுக்காக எடுக்கப்பட்ட குடைவரை கோயில் இதுவென கல்வெட்டுகள் கூறுகின்றன.)
- பழனியாண்டவர் கோயில் (இக்கோயிலில் பின்னுள்ள பாறையில் மகாவீரர், பார்சுவநாதர் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகிறது)
- காசிவிஸ்வநாதர் கோயில் (இக்கோயில் முன்னுள்ள பாறையில் பார்சுவநாதர் சிற்பங்கள் உள்ளது)
- சிக்கந்தர் தர்கா (தர்காவிற்கு பின்பக்கம் கற்படுக்கைகள் கொண்ட குகைத்தளம் உள்ளது)
- நெல்லித்தோப்பு
- தமிழிக் கல்வெட்டுகளுடனும், சமணர் கற்படுக்கைகளுடனும் காணப்படும் குகைத்தளம் (இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது)
- உமையாண்டவர் குடைவரைக் கோயில் (இக்கோயில் மலையின் தென்புறம், மலையின் அடிவாரத்தில் உள்ளது. இப்படம் வடக்கு முகமாக உள்ளதால், உமையாண்டவர் கோயில் குறிக்க முடியவில்லை. இக்குடைவரைக் கோயில் இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது)
நெல்லித்தோப்பு, நெல்லித்தோப்பில் இருந்து சிக்கந்தர் தர்கா செல்லும் படிக்கட்டுகள், மலையுச்சியில் உள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல், கொடிக்கம்பம், இவைகள் அமைந்துள்ள மலையுச்சி ஆகியவை இசுலாமியர்களுக்கு (தர்கா நிர்வாகம்) பாத்தியப்பட்டது. இவை போக மீதமுள்ள மலையின் பகுதிகள் திருப்பரங்குன்றம் கோயில் (தேவஸ்தானம்) நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்டது என 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, 21சாட்சிகளை விசாரித்து P.G இராம ஐயர் அவர்கள் வழங்கிய தீர்ப்பு (O.S No. 4/1920) உறுதி செய்கிறது. இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த பல்வேறு வழக்குகளில் இத்தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
தமிழ் தாசன்
Somasundaram