ஏப்20.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
ஆளுனர் விவகாரத்தில் நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி அரசியல் செய்யகின்றனர். எனது பதிலைக் கேட்காமலேயே வெளிநடப்பு செய்துள்ளனர். கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான பொய். ஆளுநரின் பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது; இதில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது.
ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆளுநர் விவகாரத்தில் விடியா அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி, எனது பதிலைக் கேட்காமலேயே வெளியில் சென்றுள்ளார். நமக்கு இதுதான் வாய்ப்பு என இதை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளின் இயல்பு தான். வழக்கம் போல் சேர்ந்தே அறிக்கை விடும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுநர் விவகாரத்தில் தனித்தனியாக அறிக்கை விட்டுள்ளனர்.
ஆளுனர் சென்னா ரெட்டி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்., தேர்தல் கமிஷனர் சேஷன் மீது தாக்குதல், சு.சுவாமி மீது அசிங்க தாக்குதல் சந்திரலேகா IAS மீது ஆசிட் தாக்குதல் என ஆட்சி செய்தது அதிமுக.. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவிகள் இறந்த சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்ன முதல்வர்தான் எடப்பாடி பழனிச்சாமி. கவர்னர் மீது தாக்குதல் நடத்தியதோடு சட்டமன்றத்தில் அவரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானமும் போட்டனர். அதையெல்லாம் நினைத்துக்கொண்டு இப்போது நடக்காததை நடந்ததுபோல் பேசுகின்றனர் என்றார்.