நவ.25.
கரூர் மாவட்டத்தில் 73 சங்கங்களை சேர்ந்த தொழில் முனைவோர் ஒன்றிணைந்து உருவாக்கிய கரூர் விஷன் 2030 என்ற கூட்டமைப்பு வரும் 2030ம் ஆண்டுக்குள் கரூரில் பொருளாதார வளர்ச்சியை ரூ.50,000 கோடி அளவுக்கு இலக்கு வைத்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கரூர் விஷன் 2030 திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கரூர் கிளை மற்றும் யங் இண்டியன்ஸ் (ஒய்ஐ) கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றன. சிஐஐ கரூர் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன், யங் இண்டியன்ஸ் தலைவர் கார்த்திகேயன் வரவேற்க, அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து ஒலிம்பிக் ஜோதியை பெற்றுக்கொண்டார்., “கரூர் விஷன் 2030 என்ற திட்டம் மூலம் கரூர் பொருளாதாரத்தை ரூ.50,000 கோடியாக உயர்த்துவோம். அதற்கு தேவையான திட்டங்களை முதல்வர் மற்றும் துணை முதல்வர் நமக்கு வழங்குவார்கள்” என்றார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், எஸ்.பி ஃபெரோஸ் கான் அப்துல்லா, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, டி ஆர்ஓ கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா, மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் அட்லஸ் கலையரங்கில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது-
திமுக ஆட்சி அமைந்த பிறகு கரூர் மாவட்டத்திற்கு வேளாண்மை கல்லூரி, அரவக்குறிச்சி கடவூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட ரூ. 3000 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்கள். மேலும் பல்வேறு திட்டங்கள் இடம் தேர்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டது. அதனை வேகப்படுத்தும் பணிகள் கலெக்டர் தலைமையில் துறை அதிகாரிகள் மூலம் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி கட்டமைப்புகள் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என அந்தந்த துறை அதிகாரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று செயல் வடிவம் பெற துவங்கியுள்ளன. 200 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது . பொங்கலுக்குள் நில ஆர்ஜிதம் செய்யும் பணி முடிவடையும். அரவக்குறிச்சி அருகே முருங்கை பூங்கா, கரூர் டிரேட் சென்டர், சிறிய ஜவுளி பூங்கா, விமான நிலையம், அமைக்கப்பட உள்ளது. தற்போது ஏற்றுமதியாளர்கள் இரண்டு மணி நேரம் காரில் பயணம் செய்து வந்து செல்ல வேண்டி உள்ளதால் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். தனியாரிடமிருந்து இடத்தை பெற வேண்டி இருப்பதால் அவர்களுடைய உரிமையையும் பார்க்க வேண்டியது உள்ளது. கரூர் மாநகராட்சி ஆனதால் வரி உயர்த்தப்பட்டுள்ளது அதை குறைக்க வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தனர். வரி குறைக்கப்படும்.
கரூர் காமராஜ் மார்க்கெட் ஏற்கனவே இருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அமராவதி ஆறு ஆண்டுக்கு ஒரு முறை தூர்வாரப்படும். தாதம்பாளையம் ஏரி வனத்துறை வசம் இருப்பதால் மாற்று இடம் ஒதுக்கி பொதுப்பணித்துறை வசம் எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும். கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் அமைக்கப்படும்.
கரூர் புறநகர் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கு விரைவில் முடிந்து நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். 40% பணிகள் நடைபெற்ற நிலையில் காழ்ப்புணர்ச்சியோடு கோர்ட்டுக்கு போய் உள்ளனர். அதேபோல் போட்டித் தேர்வு மாணவர்களின் வசதிக்காக ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படுகிறது. இதற்கும் சிக்கல் ஏற்படுத்தினார்கள். பிரச்சனை தீர்க்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகளிர் தங்கும் விடுதி அமைக்க டெண்டர் தயாரிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி அமைய இருக்கிறது. வெங்கமேடு மீன் மார்க்கெட் பணி விரைவில் முடிவடையும். டைட்டல் பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.சிப்காட் வளாகத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை இங்கே கூறினார்கள். அனைத்தையும் நிறைவேற்ற நான் பாடுபடுவேன். வாக்களித்த மக்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றுவது எனது கடமை.
ரூ. 40 கோடி மதிப்பீட்டில் குளித்தலை மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்பணைகள் கட்டப்படும் நெருர் -உண்ணியூர் பாலம் 100 கோடி மதிப்பீட்டில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் சென்னை செல்வோருக்கு ஏதுவாக அமையும். மேட் இன் இந்தியா போல மேட் இன் கரூர் என்ற நிலை உருவாக வேண்டும். மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தேவைகளையும் அரசிடம் இருந்து பெற்று தர வேண்டியது எனது கடமை பொறுப்பு என உறுதி அளிக்கிறேன் என்றார்.