ஜன.31.
சென்னை தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் புதிதாக 325 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதன் செயல்பாடுகளை இன்று தொடங்கி வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தற்போது தூத்துக்குடி துறைமுகம் தளம் 1 மற்றும் தளம் 2ல் நிலக்கரியை கையாள்வதற்கு சுமார் 50,000 முதல் 55,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிரேனுடன் கூடிய சிறிய கப்பல்கள் மாதம் ஒன்றிற்கு பத்து முதல் 12 வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் கையாளவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5அலகுகளிலும் (5 x 210) மெகாவாட் முழு அளவில் மின் உற்பத்தி தங்கு தடை இன்றி நடைபெறவும், தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், ரூபாய் 325 கோடி செலவில் தூத்துக்குடி துறைமுகம் தளம் 1ல் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட புதிய 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம் கப்பல் ஒன்றிற்கு 70,000 டன் முதல் 75,000 டன் வரை அதிக கொள்ளளவு நிலக்கரியை இறக்க முடிவதால் நிலக்கரியை கையாளும் சரக்கு கட்டணம் டன் ஒன்றுக்கு ரூபாய் 700 இருந்து 540 ஆக குறையும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80 கோடி ரூபாய் சேமிப்பாக கிடைக்கும். இந்நிகழ்ச்சியில் சமூக நலன் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டார்.