அக்.8.
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ் தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை உள்ள தார்சாலையை புணரமைத்தல் பணி மேற்கொள்ள செயல்முறைகளில் நிர்வாக அனுமதி வழங்கி, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த விலைப்புள்ளி அளித்த +M/S. Chinnammalஎன்ற நிறுவனத்திற்கு செயல்முறைகளின்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டது.
மேற்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பேட்ஜ் ஓர்க் முடித்து (06.10.2023) வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 1050 மீட்டர் மட்டும் தார்சாலை போடப்பட்டது. தார்சாலை போடப்பட்டு முழுமையாக செட் ஆவதற்கு 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகக்கூடிய சூழ்நிலையில், வீரசிங்கம்பட்டி குக்கிராமத்தில் இறுதியாக தார்சாலை மாலை 6.00 மணிக்கு முடிக்கப்பட்ட இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தார்சாலையை சேதப்படுத்தியுள்ளனர்.
ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் தவறான வீடியோக்களை பதிவிட்டு உண்மைக்கு புறம்பான அதாவது தார்சாலை தரம் இன்றி இருப்பதாக தவறான கருத்துக்களை பரப்பி மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தினர்.
ஏதோ இவர்கள் பொறியாளர்களைப் போல சாலை பெயர்ந்து விட்டது என வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.
இது பற்றி அறிந்ததும் கரூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் இன்று அப்பகுதிக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நாடகத்தை நடத்தி இருப்பதும் தெரிய வந்தது. ரோடு போட்ட உடனேயே அதை பெயர்த்து எடுத்தால் தோசை போல மட்டுமல்ல இட்லி போலவும் வரும். வேலையில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சாலையின் நரம் குறித்து ஆய்வு செய்திட போடப்பட்ட சாலையில் சேதப்படுத்திய இடத்திற்கு அருகில் நீளம் + அகலம் 10 செ.மீ.+ 10 செ.மீ. மற்றும் ஆழம் 3.0 செ.மீ. என்ற அளவில் வெட்டி எடுக்கப்பட்ட போது ஆழம்
35 செ.மீ. இருப்பது தெரியவந்தது. இதன்படி கூடுதலாக தார்சாலையின் கனம் 0.5 செ.மீ. இருந்தது தெரியவந்தது. வெட்டி எடுக்கப்பட்ட தார்சாலையின் மூலப்பொருட்கள் (தார் மற்றும் ஜல்லி) கெட்டி எடுத்து பயன்படுத்தப்பட்ட தாரின் அளவு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. 5.4% தார் இருக்க வேண்டிய இடத்தில் 5.5% இருந்தது. மூலப்பொருட்கள் தர ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்படையில், சாலை தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல் துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. வாணிஈஸ்வரி, கடவூர் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ஒப்பந்ததாரர் மற்றும் வீரசிங்கம்பட்டி ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.