மார்ச்.6..
பொதுமக்கள் கேட்கும் சான்றிதழ் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். இயலாவிட்டால் ஏன் வழங்கவில்லை என்பதை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு முதல்வர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் பேசுகையில்,
தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு உணர்ந்து, அதற்கென, பல திட்டங்களை வகுத்து வருகிறது. அதே சமயத்தில், அரசு அறிவித்துள்ள பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
மக்கள் பணி என்பது முழு ஈடுபாட்டுடன் செய்யவேண்டிய ஒன்றாகும். பெரும் நம்பிக்கையோடு மக்கள் உங்களை நாடி வந்து மனுக்களை பெரும் எதிர்பார்ப்போடு அளிக்கின்றார்கள்; அவர்களைப் பொறுத்தவரை நீங்கள் தான் அரசு; எனவே, உங்களால் இயன்றவரை அந்தப் பிரச்சனையை, தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு. எதிர்காலம். கடமை. நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை.
பட்டா மாறுதல், பட்டாக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், மற்றும் சான்றிதழ்களை குறிப்பிட்ட கால அளவிற்குள் வழங்குதல் ஆகியவையாகும். ஒரு விண்ணப்பதாரருக்கு அரசு அலுவலகத்தில் மனு சமர்ப்பித்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள். ஏற்கெனவே சட்டத்தில் வகுத்தபடி உள்ள கால அளவிற்குள், அந்தச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் அல்லது ஏன் வழங்க இயலாது என்பதற்கான தகவல் அவருக்கு சென்றடைய வேண்டும். இந்த நடைமுறை ஒவ்வொரு அலுவலகத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என். நேரு. இ. பெரியசாமி. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின். கே.ஆர். பெரியகருப்பன், பி.மூர்த்தி, முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, அரசு துறைச் செயலாளர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், .,திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச. விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி0தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.