தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ஆட்டோ டிரைவர் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
மொத்தம் 48 வார்டுகளில் திமுக 38, அதிமுக 3, சுயேச்சைகள் 3, காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடங்களில் வெற்றி பெற்றன. இரண்டு இடமே பெற்றிருந்தாலும் மேயர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சிமாநகராட்சி 17வது வார்டு உறுப்பினரான சரவணன் கும்பகோணத்தின் முதல் மேயராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் முறையாக போட்டியிட்டு, வென்ற இவர் பதவி ஏற்பதற்கு முன்புவரை ஆட்டோ டிரைவராக பணி மாற்றி வந்தவர்.
செய்தியாளர்களிடம் மேயர் சரவணன், 20 ஆண்டுகளாக ஆட்டோ தொழில் தான். கடந்த 7 ஆண்டுகளாக சொந்த ஆட்டோ ஓட்டி வருகிறேன். வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். ஆட்டோ ஓட்டுநராக இருப்பதால், மாநகரின் அனைத்து பகுதிகளையும் நன்றாக அறிவேன். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் என்றார்.