செப்.24.
தமிழ் பரப்புரை கழகம் தொடக்க விழா இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பேசியது-.
தமிழ் வெறும் மொழி அல்ல . அது நம் உயிர் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதை முழக்கமாக கொண்ட திமுக அரசுக்கு தமிழ்ப்பாதுகாப்பு கழகம் தொடங்குவது என்பது முழு முதல் கடமை. தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பவியலுக்கு அடித்தளம் அமைத்தது திமுக அரசு தான். 1996 ஆம் ஆண்டு முதலமைச்சராக கலைஞர் தகவல் தொழில்நுட்ப புரட்சியை தொடங்கினார். உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு கலைஞர் அடித்தளம் அமைத்தார். அடுத்த கட்டம் தான் கணினி மயமாக்கல். நம்முடைய அறிவு சொத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அறிவியல் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மாற்றி சேமித்து வைக்கக்கூடிய மகத்தான பணியை தமிழ் இணைய கல்வி கழகம் செய்து வருகிறது. 1999 ஆம் ஆண்டு தமிழ்நெட்99 என்ற தமிழ் இணையவழி மாநாட்டின் மூலம் கலைஞர் அறிவித்தார் . 2000 ம்ஆண்டில் தமிழிணைய கல்வி கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கற்பித்தல்
தமிழர்கள் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும் பேசவும் படிக்கவும் மறந்த தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழை சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் இது தொடங்கப்பட்டுள்ளது . 24 மொழிகளில் தமிழ் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 நாடுகள் 20 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைய வழி வாயிலாக இணைந்து இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.
மொழியால் இணைந்தவர்களை சாதி மதத்தால் பிரிக்க முடியாதுதமிழ் இணையக்கல்வி கழகத்தின் சார்பில் அயலக வாழ்தமிழர்களுக்கு அடிப்படை நிலை முதல் பட்டக் கல்வி நிலை வரை தமிழ் வழி கல்வியானது இணைய வழியாக அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தொடர்பு மையங்கள் மூலம் தமிழ் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 28 தொடர்பு மையங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் 17 புதிய தொடர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் புத்தகங்கள் மின் உருவாக்கம் செய்யப்படுகின்றன. கணினித் தமிழுக்கு தேவைப்படும் மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில் கீழடி என்ற விசை பலகையும், தமிழிணைய ஒறுங்குறி மாற்றியும் நமது அரசால் வெளியிடப்பட்டன. தமிழ் எழுத்துருக்களை தரப்படுத்தி அவற்றை உலகம் முழுமைக்கும் பொதுமைப்படுத்தி இருப்பது தமிழ் இணைய க் கல்வி கழகத்தின் முக்கிய சாதனை.
மாணவர்கள் பங்கேற்பை உறுதி செய்ய கணினி தமிழ் பேரவைகள் 200 கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ளன . ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய தலைவர் ஒருவர் தமிழுக்கு திமுக என்ன செய்தது என்று கேட்டுவிட்டு போய்விட்டார். தமிழுக்கு என்ன செய்யவில்லை என்பது தான் அவருக்கு நம்முடைய பதிலாக இருக்க முடியும்.
கல்வி- வேலை வாய்ப்பு- வெளிநாட்டு வாழ்க்கை ஆகியவற்றின் காரணமாக தமிழை முழுமையாக பயன்படுத்த முடியாத சூழலுக்கு அயலாகத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடி . இருந்தாலும் தமிழைத் தள்ளி வைத்து விடக்கூடாது. மொழி தான் இனத்தின் அடையாளம். தாய்மொழி பற்று என்பது தாய்மொழி படிப்பாக தாய்மொழி அறிவாக மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
தமிழ் கற்றல் என்பது ஒரு பாடமாக இல்லாமல் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் . 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் 12 மொழிகளில் ஒளி புத்தகமாகவும் கிடைக்கிறது . இதன் தொடர்ச்சியாக ஐந்தாம் நிலை வரையிலான பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. இதன் மூலமாக தமிழில் பேசலாம், படிக்கலாம் என்பது எளிமையாகப்படும். தமிழ் படிப்பது என்பதை சுவைக்காக மட்டும் இல்லாமல் தமிழ் பண்பாட்டை அறிவதற்காகவும் அனைவரும் படிக்க வேண்டும். நம்முடைய இலக்கியங்கள் அறநெறியை அதிகமாக வலியுறுத்துகின்றன. முதல் நிலை முதல் பருவத்திற்கான பாடங்கள் 26 நாடுகள் 20 மாநிலங்களில் உள்ள தமிழ் பள்ளிகள், தொடர்ப்பு மையங்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 25 ஆயிரம் மாணவர்கள் முதல் கட்டமாக பயனடைய இருக்கிறார்கள் என்றார்.
அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரன், மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, எபினேஷன் வேலு, எம்பி கிரி ராஜன், சென்னை மேயர் பிரியா, இலக்கியச் செல்வர்குமரி அனந்தன், அரசு செயலாளர்கள் உதயசந்திரன், மகேசன் காசிராஜன், இயக்குனர் ஜெயசீலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.