.ஜூன்.13.
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- அமெரிக்கா அணிகள் விளையாடின. முதலில் ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் ஹர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி வெறும் ஒன்பது ரன்களே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா இரண்டு, அக்சர் படேல் ஒரு விக்கெட் எடுத்தனர். முன்பு பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3.2 ஓவர்களில் 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். தற்போது ஹர்ஷ்தீப் சிங் பத்துக்கும் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். எனினும் அடுத்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் சொதப்பியதால் சிக்கல் ஏற்பட்டது.
இந்த மைதானத்தில் இதுவரை 100 ரன்களுக்கு மேல் எந்த அணியும் சேஸிங் செய்ததே இல்லை என்பதால் இது நல்ல வாய்ப்பு என அமெரிக்க அணி கருதியது.
அதுபோலவே இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி சொதப்பல் ஆட்டத்தை ஆடினார்கள். வேர்ல்ட் கப் என்பதை மறந்த விராட் கோலி முதல் பந்திலேயே டாக் அவுட் ஆகி வெளியேறினார். ரோஹித் சர்மாவோ மூன்று ரன்களில் அவுட் ஆகிவிட்டார். ரிஷப் பண்ட் 18 ரன்கள் எடுத்தார். அதன் பின் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இணைந்து ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ரன் எடுக்க முடியாவிட்டாலும் அவுட்டாகாமல் சமாளித்தனர். ஒரு ஓவருக்கு 7 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் 15 வது ஓவரின் முடிவில் அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அம்பயர் அமெரிக்க அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி விதித்தது தான் அது.
உலகக்கோப்பையில் பந்து வீசும் அணி ஒவ்வொரு ஓவருக்கும் இடையில் 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் அடுத்த ஓவரை வீச வேண்டும் என்ற விதி உள்ளது. மூன்று முறைக்கு மேல் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீச தயாராகவில்லை என்றால் அந்த அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி. அதாவது எதிரணிக்கு அதன் ஸ்கோரில் ஐந்து ரன்கள் சேர்க்கப்படும்.
அந்த வகையில் 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. 5 ரன்கள் கிடைத்ததால் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் போதும் என சூழ்நிலை மாறியது. அதனால், ரன் ரேட் அழுத்தம் வெகுவாக குறைந்தது.
இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் 17வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை நோக்கி வழி நடத்தினார். அவர் 50 ரன்கள் குவித்தார் சிவம் துபே 31 ரன்கள் எடுத்தார். 18.2 ஓவர் முடிவில் அதாவது 10 பந்துகள் இருந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றது.