செப்.30.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை ஜோ.அருண் தலைமையில், உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம் சம்பத், கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், கரூர் எம்.பி.ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பேசியது-
தமிழ்நாடு சிறுபான்மையின மக்களை சிறப்பாக வழிநடத்தும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
கரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் 319 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 151 பயனாளிகளுக்கு ரூ.7.82 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகளும், வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்க 2 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மானியமும் வழங்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மையினருக்கான மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்கள் 100 பயனாளிகளுக்கு ரூ.5.56 இலட்சம் மதிப்பிலும், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 295 பயனாளிகளுக்கு ரூ.1.89 இலட்சம் மதிப்பிலும் எண்ணற்ற அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் மகளிர் நலனுக்காக மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள கிறித்துவ மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.20 இலட்சம் வரை இணை மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட தனி நபர் கடன். சிறு வணிகக் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 131 பயனாளிகளுக்கு ரூ.80.27 இலட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று. கிறித்துவ தேவாலயங்கள் புணைமைக்க தமிழ்நாடு அரசின் மூலம் நிதியுதவிகள் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், கிறித்தவர்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத் தோட்டம் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு சிறுபான்மையினர் மக்களுக்கான முழுமையான பாதுகாப்பையும். உரிமைகளையும் நிலைநாட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
இக்கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் பொன். ராஜேந்திர பிரசாத், நாகூர் நஜிமுதின் ஜேமுகமது ரஃபி, வசந்த், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன். மாநகராட்சி ஆணையர் சுதா. பள்ளப்பட்டி நகராட்சித்தலைவர் முனைவர் ஜான். மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ். மாவட்ட பிற்படுத்தப்படோர் மற்றும் சிறுபான்மையின் நல அலுவலர் இளங்கோ கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.