மே.14.
தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் பார்வையிட்டார்.
கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. கரூர் மாவட்டத்திலுள்ள 91 தனியார் பள்ளிகளின் 721 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 26 வாகனங்களில் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது. தனியார் பள்ளி வாகனங்களை இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பான். வேகக் கட்டுப்பாட்டு கருவி. சி.சி.டி.வி கேமிரா, அவசரகால வழி, படிக்கட்டுகளின் உயரம், காற்றோட்ட வசதி, கதவு, பிரேக்கின் தன்மை, பேருந்துகளில் இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்று அளிக்கப்படும்.
குறைபாடுகள் இருப்பின் சரி செய்துவர கால அவகாசம் அளிக்கப்படும். குறிப்பாக, மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்படும். வாகன ஓட்டுநர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன், ஏடிஎஸ்பி. பிரபாகரன், டி.எஸ்.பி. செல்வராஜ்அறிவுரை வழங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டன.