நவ.30.
அன்னை ஜானகி எம் ஜி ஆர் நூற்றாண்டு துவக்க விழா, சிறப்பு மலர் வெளியீடு, திருவள்ளுவர் சிலை திறப்பு விழா- பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் -ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் அவர் பேசியது-
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற சிறப்புக்குரியவர் ஜானகி எம் ஜி ஆர். அவரது நூற்றாண்டு விழாவில் நான் கலந்து கொண்டது சிலருக்கு வியப்பாக- அதிர்ச்சியாக- ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வரலாற்று உண்மையை மனசாட்சி படி சிந்திக்கும் யாருக்கும் அதிர்ச்சியாக இருக்காது. மதிப்பிற்குரிய மக்கள் திலகம் 20 ஆண்டுகாலம் திமுகவில் இருந்தார். காலத்தின் சூழ்நிலை. தனி இயக்கம் கண்டார் அவருடைய பங்களிப்பு என்பது 15 ஆண்டுகள் தான். அதிக ஆண்டுகள் திமுகவில் தான் இயங்கிக் கொண்டிருந்தார். அவரே இதை சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார் நான் கோவையில் இருந்த போது கலைஞர் சிறிது காலம் என்னோடு இருந்தார். அவரை எப்படியாவது எனது தேசிய கொள்கை இயக்கத்திற்கு இழுக்க முயற்சித்தேன். இறுதியில் அவர் தான் வென்றார். நான் திமுகவில் இணைந்தேன். இதுதான் வரலாறு. இன்றைக்கு தலைவராக கலைஞரும், நான் பொருளாளராகவும் இருக்கிறேன் என எழுதி இருக்கிறார். இதெல்லாம் தெரிந்தவர்களுக்கு நான் இந்நிகழ்ச்சியில் பங்கெடுப்பது வியப்பாக இருக்காது. இவ்வளவு பெரிய இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியவர் கலைஞர்.
எம்ஜிஆர் படம் ரிலீஸ் ஆனால் முதல் ஆள் முதல் டிக்கெட் நான்தான் வரிசையில் போய் வாங்குவேன். அவர் படம் ரிலீஸ் ஆனால் என்னிடம் கேட்பார் எப்படி இருந்தது? என. நான் ஓப்பனாக சொல்வேன். இது அப்படி இருந்தது. அது அப்படி இருந்தது என்று சொல்வேன். கோபாலபுரத்தில் இளைஞர் திமுக சார்பில் நான் நடத்திய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வந்திருக்கிறார் சூட்டிங்கில் இருந்து மேக்கப் உடன் வந்துவிடுவார் . அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு முரசு முழங்கு என்று ஒரு நாடகம் போட்டோம். முதல் அரங்கேற்றம் சைதாப்பேட்டையில் நடைபெற்ற போது மக்கள் திலகம் தலைமை தாங்க வருகிறார் என்பதற்காக தெருவில் மக்கள் தரையில் உட்கார்ந்து இருந்தனர். முன்னால் சோபா செட் போட்டு இருந்தோம் அவருக்காக. . வந்தார் முதலில் அதை எடு என்றார். தரையில் உட்கார்ந்து நாடகத்தை பார்த்து என்னை பாராட்டி சென்றவர் தான் மக்கள் திலகம்.
எம்ஜிஆர் -ஜானகி அம்மையார் கதாநாயகன், நாயகியாக நடித்த முதல் படம் மருதநாட்டு இளவரசி. அப்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் நாம். இரண்டுக்கும் கதை வசனம் கலைஞர். என்னுடைய ஒரே வாரிசு ஜானகி மட்டும்தான் என உயில் எழுதி வைத்திருந்தார் மக்கள் திலகம். 1991 முதல் 95 வரை இக்கல்லூரிக்கான அனுமதியை பெற முடியாமல் இருந்தது. அது என்ன சூழ்நிலை என்பதை விளக்க விரும்பவில்லை. நான் சென்னை மேயராக இருந்தபோதும் இங்கு வந்திருக்கிறேன். இங்கு சைகை மொழியை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கையை செயல்திட்டம் ஆக்குவோம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் தனி இயக்கம் கண்டாலும் தனது கொள்கையில் அண்ணாயிசத்தைக் கட்டிக்காத்தார் என்றார்.
அமைச்சர்கள் பொன்முடி, மா.சுபிரமணியன், முத்துசாமி, ராமச்சந்திரன், சக்கரபாணி, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம் எல் ஏ வேலு, கல்லூரி தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் மணிமேகலை, விஜி சந்தோஷம், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.