ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸில் ஆர்சிபி – மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறது. அடுத்தபடியாக கே கே ஆர் மூன்று முறையும், சன்ரைசர்ஸ், டெக்கான் சார்ஜஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. குவாலிபயர் 2ல் மும்பை அணி தோல்வியை தழுவியது.
இதுவரை கோப்பை வெல்லாத ஆர்சிபி- பஞ்சாப் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற அணி என்ற சாதனையை அடைய முனைப்புடன் உள்ளன. 18 ஆண்டுகளாக விராட் கோலி, ஆர் சி பி அணிக்காக கடுமையாக போராடி வருகிறார். பஞ்சாப் அணியை பொறுத்தவரை 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக பைனலுக்கு வந்துள்ளது. மேலும் ஸ்ரேயாஸ், டெல்லி கொல்கத்தா மற்றும் பஞ்சாப் என மூன்று அணிகளின் கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தனது அணியை தகுதி பெற வைத்திருக்கிறார். இதில் கொல்கத்தா அணியின் சாம்பியன் பட்டத்தை ஸ்ரேயாஸ் வென்ற நிலையில், மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மூன்றாம் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் டேவாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் “டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ஸ்ரேயாஸை பார்த்து வருகிறேன், பஞ்சாப் அணி பைனல் செல்லவும், கோப்பையை வெல்லவும் ஸ்ரேயாஸ் தேவை என்பதை தொடக்கத்திலேயே அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன்.
சக வீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அணியை வழிநடத்துவதிலும் ஸ்ரேயாஸ் சிறந்த கேப்டன். அன்கேப்டு வீரர்களை அணிக்கு எப்படி பயன்படுத்த முடியுமே அதை ஸ்ரேயாஸ் சிறப்பாகச் செய்தார். பிரப்சிம்ரன், ஆர்யா மீது ஸ்ரேயாஸ்மிகுந்த நம்பிக்கை வைத்து செயல்பட்டார். அவர்களும் அவரின் நம்பிக்கயை காப்பாற்றும் வகையில் செயல்பட்டனர். இளம் வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களை எப்படி வளர்த்துவிட வேண்டும் என்பதில் ஸ்ரேயாஸ் சிறந்தவர்” எனத் தெரிவித்தார்.
பல அணிகள் வெளிநாட்டு வீரர்களை அதிகமாக நம்பிய நிலையில், பஞ்சாப் மட்டும் அதிகமான உள்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அதிலும் சொந்த மாநில பஞ்சாப், சண்டிகர் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதை வெற்றியாகவும் மாற்றியது. ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக அன்கேப்டு வீரர்கள் பஞ்சாப் வீரர்களே 1519 ரன்கள் சேர்த்துள்ளனர், 163 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 34 சராசரியும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.