செப்26.
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம், இன்று காலை ஜாமீன் வழங்கியது. செய்தி வந்ததும் புழல் சிறையில் திமுக தொண்டர்கள் திரண்டனர். மேலும், கரூரில் திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். புழல் சிறையின் வெளியே, திமுக தொண்டர்கள் காலை முதல் இரவு வரை செந்தில் பாலாஜியின் வருகைக்காக கையில் கொடிகளை ஏந்தியபடி காத்திருந்தனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும்,கொட்டு மேளங்களை இசைத்தபடி, பல மணி நேரம் தொண்டர்கள் சிறை வளாகத்திலேயே காத்திருந்தனர்.
புழல் சிறையில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். சிறைச்சாலையின் வெளியே காத்திருந்த திமுக தொண்டர்கள் அவருக்கு மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். செந்தில் பாலாஜியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக துண்டுகள் அணிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
471 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு. சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன்” என செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.