ஜூன்.25.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியை தட்டிப்பறித்த ட்ராவிஸ் ஹெட் மீண்டும் இப்போதும் அதிரடி காட்ட பும்ரா அடக்கினார்.
போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர் விராட் கோலி 5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வழக்கம்போல வெறுப்பேற்றினார். இந்த லிஸ்டில் தான் கேப்டன் ரோகித்தும் இருந்தார் இவர் எல்லாம் ஒரு கேப்டனா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். ரோகித் சர்மாவுக்கு கோபம் வந்திருச்சு.. என்பதைப் போல மிகச் சிறப்பாக ஆடினார். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார் அவர். சூறாவளியாக சுழன்று 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.
அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் 15, சூர்யகுமார் யாதவ் 31, சிவம் துபே 28, ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் டேவிட் வார்னர் விக்கெட்டை முதல் ஓவரிலேயே தூக்கினர். 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் – ட்ராவிஸ் ஹெட் இணைந்து அதிரடி ஆட்டம் ஆட ஜோலி முடிந்தது என ரசிகர்கள் கவலை அடைந்தனர். மார்ஷ் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப மேக்ஸ்வெல் பயமுறுத்தியபோதும் 12 பந்துகளில் 20 ரன்னில் வெளியேறினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 2 ரன்கள் என்று விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ட்ராவிஸ் ஹெட் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இவர் நிலைத்திருந்தால் வெற்றியை தட்டி இருப்பார் என்ற நிலை ஏற்பட்ட போது பும்ராவின் பந்து வீழ்ச்சில் பெவிலியன் திரும்பினார். பும்ரா வீசிய 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னரே இந்திய அணி வீரர்கள் முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்தது.
அடுத்து வந்த டிம் டேவிட் 15, மேத்யூ வேட் 1, பாட் கம்மின்ஸ் 11 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.