ஏப்.26.
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் தொடர் தோல்விக்கு விடை கொடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 6 போட்டிகளில் தோல்வி. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடினர். தொடர் தோல்வியை பெற்ற அணிதானே என எதிரணியை குறைத்து மதிப்பிட்ட ஹைதராபாத் அணியின் எண்ணத்தை அடித்து நொறுக்கினர். தொடர் தோல்விபெற்ற வீரர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களின் ஆதரவு துளியும் மைதானத்தில் இல்லாத நிலையிலும் மிரட்டலாக விளையாடினர். 35 ரன்களில் வெற்றி பெற்றது ஆர்.சி.பி.
வெற்றிக்கு பின்னர் ஆர்சிபி கேப்டன் டூப்ளசி தெரிவித்தது. “கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் முடிந்தவரை போராடினோம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 270+ ரன்கள் குவித்த போட்டியில் நாங்கள் 260 ரன்கள் எடுத்தோம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1 ரன்னில் தான் ஆட்டத்தை இழந்தோம்.
நாங்கள் வெற்றியை நெருங்கினோம்.
எனினும் ஒரு டீம் நம்பிக்கையை பெற வேண்டும். அதற்கு வெற்றி பெற வேண்டியது அவசியம். இன்று இரவு நாங்கள் அனைவரும் நிம்மதியாக உறங்குவோம். கள செயல்பாடுகள் தான் நம்பிக்கையூட்டும். பேசியோ அல்லது போலியாகவோ நம்பிக்கையை பெற முடியாது.
இந்த தொடரில் போட்டியிடும் அணிகள் வலுவானவை. களத்தில் 100 சதவீத செயல்பாடு இல்லாவிட்டால் வேதனை தரும் முடிவுகளைத் தான் சந்திக்க வேண்டும். அணியில் அதிகம் பேர் ரன் சேர்க்கிறார்கள். முதல் பாதியில் விராட் கோலி மட்டுமே ரன் குவித்து வந்தார். பெங்களூரு – சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீசுவது கடினமானது” என அவர் தெரிவித்தார்.