1987ம் வருடம், இதே போன்ற ஒரு அரச பயங்கரவாதத்தில் சிக்கியது, ஆனந்த விகடன். அட்டைப்படத்தில் வெளியான ஜோக் ஒன்றைக் காரணம் காட்டி விகடன் ஆசிரியர் மறைந்த எஸ்.பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்டார்.
விகடன் அட்டைப்பட ஜோக் அது.
பொதுக்கூட்டம் நடக்கிறது… இரண்டு அரசியல்வாதிகள் முன்வரிசையில் அமர்ந்து இருக்கிறார்கள். மேடைக்குக் கீழே பொது ஜனங்களில் ஒருவர், ‘‘மேடையில் இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி?’’ என்று கேட்கிறார். அதற்கு மற்றவர், ‘‘ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கறவர்தான் மந்திரி..!’’
என்று பதில் கூறுவதாக அந்த நகைச்சுவைத் துணுக்கு வெளியாகி இருந்தது.
இதை படுதலம் சுகுமாரன் என்பவர் எழுதி இருந்தார்.
சட்டமன்றத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.வி.சித்தன், ‘அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கீழ்த்தரமாகச் சித்திரிக்கிறது இந்த வார விகடன் அட்டை!’’ என்று ஆவேசப்பட்டார்.
உடனே சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆனந்த விகடனுக்கு விளக்கம் தர வாய்ப்பே அளிக்காமல், குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
‘‘விடகனின் சட்டமன்ற உரிமையை மீறுகிறது. அடுத்த வார ஆனந்த விகடனின் முதல் பக்கத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் உரிமைக் கமிட்டி விசாரணை இல்லாமலேயே, இந்தச் சபை தண்டனையைத் தீர்மானிக்கும்’’ என்றார்.
அடுத்த இதழில் விகடன் தலையங்கம் மூலம் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் பதில் அளித்தார்.
‘அது ஒரு சாதாரண, ஜோக்! நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஜோக்கில் இடம் பெற்ற மந்திரியும் எம்.எல்.ஏ.வும் தமிழ்நாட்டை மட்டுமல்ல – எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ‘வக்கீல் ஜோக்… டாக்டர் ஜோக்… நடிகை ஜோக்’ – என்பதைப் போல இது அரசியல்வாதி ஜோக்! உலகிலுள்ள எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய, இந்த நகைச்சுவைத் துணுக்கு, ஜனநாயகத்தை பயன்படுத்தி பதவிக்கு வந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் அரசியல்வாதியைப் பற்றியது.’ என்று குறிப்பிட்ட விகடன் ஆசிரியர், சட்ட ரீதியான விளக்கத்தையும் அளித்தார்.
‘ உரிமை மீறல் பிரச்னையில் அவை முன்னவர் குற்றம் சாட்டி, அது சபை அங்கத்தினர்களால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அதன்மீது சபாநாயகர் தீர்ப்பு அளிக்க வேண்டும்! சபாநாயகர் தன்னிச்சையாக தீர்ப்பு வழங்கக் கூடாது…’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பி.எச்.பாண்டியன், விகடன் ஆசிரியருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை அறிவித்தார். அன்று மாலையேயே சிரியர் எஸ். பாலசுப்ரமணியன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அது ஒரு சனிக்கிழமை.
இது தமிழ்நாடு, இந்தியா கடந்து உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டசபை நிகழ்ச்சிகளை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். அகில இந்திய அளவில் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். ‘உலகில் வேறு எங்கும் இப்படி நடந்ததேயில்லை!’ என்று பிரிட்டன் நாட்டு பி.பி.சி. தெரிவித்தது.
திங்கட்கிழமையன்று சட்டசபை கூடியது.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.,, ‘விகடன் ஆசிரியருக்குத் தண்டனை வழங்கிய தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும்’ என்று சபாநாயகர் பி.எச். பாண்டியனை ‘கேட்டுக் கொண்டார்’.
அவரது ‘கோரிக்கையை’ ‘பரிசீலித்த’ சபாநாயகரும் விகடன் ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அன்றே விகடன் ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனாலும் ‘‘என்னைச் சிறையில் தள்ளிய விதம் முறையற்றது. எனவே, அரசு எனக்கு ஒரு அடையாள நட்ட ஈடு அளிக்க வேண்டும்!’’என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஏழு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
‘சட்டமன்றத்தின் நடவடிக்கை எதேச்சாதிகாரம். விகடன் ஆசிரியருக்கு அடையாள நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பிறகு விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் அலுவலக அறையில், இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் பிரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டுஇருந்தன.
- டி.வி.சோமு