டிச.25.
பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உறையாற்றி வருகிறார். நடப்பு ஆண்டின் ஆண்டின் கடைசி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசினார். பிரதமர் மோடி பேசியது: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கல்வி, வெளியுறவுக் கொள்கை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர். 2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது. உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.
ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாம் கவனமாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். முக கவசம் அணியவேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளின்போது மக்கள் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்களை நாம் சமாளித்து வருகிறோம். பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை இந்தியாவில் இருந்து ஒழித்துவிட்டோம். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் யோகா செய்தால் நல்ல பலன் கிடைக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 18 சதவீதம் குறைக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலில் யோகாவும் ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார்.