நவ.3.
தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள்.
பசுமைக்குடில்
பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கவும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்கவும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்து கட்டுமானத்தினுள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்றவும்.
நிழல்வலைக்குடில்
கிழந்து போன நிழல் வலைகளை தைத்து சரிசெய்து நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்யவும்
- பல்லாண்டு பயிர்கள்:
மா/ கொய்யா / எலுமிச்சை காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம்செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும் கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் நனைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும். நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
- வருடந்திரப்பயிர்கள்:
காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அணைத்து சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்குமேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.
இதர தோட்டக்கலைப் பயிர்களுக்கான வழிமுறைகள்
தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை கொத்தமல்லி கத்தரி முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, உருளைகிழங்கு, மஞ்சள் மற்றும் கேரட் போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாவண்ணம் பாதுகாக்கவும். வயல்களில் தேவையான பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.