அக்.18.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் சார்பில் முறையே மாநில, தேசிய, உலக அளவில் மாணவ, மாணவியருக்கான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆண்டு “எதிர்கால சந்ததியினருக்கு, அவர்கள் எவ்வகையான உலக வாழ்வைப் பெற்றிருப்பர்” என்ற மையக்கருத்தில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஆதிரா மணிகண்டன் முறையே தமிழக அளவிலும் இந்திய அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஜெர்மன் தலைநகரம் பெர்லினில் நடைபெறும் உலக அளவிலான இறுதிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கு பெற ஆதிரா மணிகண்டன் எழுதிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000/-க்கான காசோலை மற்றும் வெற்றிச்சான்றிதழ் வழங்கும் பரிசளிப்பு விழா இன்று பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் S.மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். கரூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் தமிழினி மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சர்வதேச அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சாதனை மாணவி ஆதிரா மணிகண்டன் மற்றும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், முதல்வர் S.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா, ஆசிரியர்களைப் பாராட்டி பரிசளித்தனர். மேலும் தேசிய அளவிலான பரிசளிப்பு விழா விரைவில் புது தில்லியில் நடைபெறும் என அறிவித்தனர். இவ்விழாவில் ஆதிராவின் பெற்றோர் மற்றும் பரணி பார்க் கல்விக் குழும மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தேசிய சாதனை மாணவியை பாராட்டி வாழ்த்தினர்.