ஜன.7.
2025 பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு வழங்கவும், பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் விடுபடாமல் வழங்கிடவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 332076 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு விற்பனை முனைய இயந்திரத்தில்(POS ) பயோமெட்ரிக் முறையில் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயிலாகவோ பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படமாட்டாது.
மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அந்தந்த நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அடிப்படையில் தெரு வாரியாக அட்டைகளின் சுழற்சி முறையில் (Staggering System) நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பரிசு தொகுப்பு வழங்குவதற்கு முன்னதாகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 03.01.2025 மற்றும் 10.01.2025 நியாயவிலைக் கடைகள் செயல்படும். (வெள்ளிக்கிழமை).
அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுச்செல்லுமாறும், இப்பணி குறித்த புகார்கள் ஏதுமிருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800- 425-5901 ஆகிய எண்களிலும் மற்றும் வட்ட அளவில் கரூர் வட்டம் 9445000266, அரவக்குறிச்சி வட்டம் 9445000267, குளித்தலை வட்டம் 9445000268. கிருஷ்ணராயபுரம் வட்டம் 9445000269, கடவூர் வட்டம் 9445796408, புகழூர் வட்டம் 9445043244, மண்மங்கலம் வட்டம் 9499937035/ 9789467689 ஆகிய எண்களிலும், அந்தந்த நியாய விலை அங்காடிகளின் தகவல் பலகையில் குறிப்பிட்டுள்ள அலுவலர்களின் தொலைபேசி எண்களிலும், தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.