ஏப்.21.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாடு பங்களா ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தவந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவுக்குள் புகுந்த மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூரைபடுகொலை செய்தனர். ஜெயலலிதா இருந்த வரையில் யாரும் நுழைய முடியாத புகைப்படம் கூட எடுக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இருந்த கொடநாடு பங்களாவில் நடந்த இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கொள்ளை சம்பவத்தின்போது காயத்துடன் உயிர் தப்பிய இன்னொரு காவலாளியான கிருஷ்ண பகதூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜிடம் விசாரணை நடத்த போலீசார் முயன்றபோது அவர் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தார்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கொடநாடு கொலை- கொள்ளை சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த தனிப்படையினரான சயான், வாழையாறு மனோஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்து தேடிவந்தனர். ஆனால் கேரள மாநிலத்தில் சயான் குடும்பத்துடன் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி விணு பிரியா மகள் நீது ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் கொடநாடு பங்களாவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இப்படி இந்த வழக்கானது மர்மக்கதைகளை மிஞ்சும் வகையில் மாறியது. இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த சயான், மனோஜ் இருவரும் டெல்லியில் வெளியிட்ட ஆடியோ வெளியிட்டனர். முன்னாள் முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறிய குற்றச்சாட்டுகளும் பரபரப்பை ஏற்படுத்தின. எடப்பாடி பழனிசாமி இதனை மறுத்தார். அவர் ஆட்சியில் இருந்தவரை கிணற்றில் போட்டகல்லானது வழக்கு.
தற்போது இந்த வழக்கினை தொடர்பாக மேற்கு மண்டலபோலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக், கொடநாடு பங்களா மானேஜர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதன்படி இன்று காலை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் விசாரணையை தொடங்கினர். சசிகலாவிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். ஐ.ஜி. சுதாகருடன் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.