டிச.8.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14பேரில் 13பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிபின் ராவத் சிறந்த ராணுவ வீரர். தேசபக்தர். அவரது சேவையை ஒருபோதும் இந்திய தேசம் மறக்காது. பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் சிறப்பாக பணியாற்றினார் என குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி ஜென்ரல் பிபின் ராவத், அவரது துணைவியார், 11 வீரர்கள் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவரது அகால மரணம் நாட்டிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு.
ஜென்ரல் ராவத் அளப்பரிய துணிவுடனும், கண்காணிப்பு உணர்வுடனும் நாட்டிற்காக சேவை புரிந்தவர். முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றிருந்த அவர், பாதுகாப்பு படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்தவர்.
குரூப் கேப்டன் குணமடைய பிரார்த்தனை
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தற்போது வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்