ஜூன்.11.
தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மக்களுக்கும் முழு உடல் பரிசோதனைகளை செய்யும்’ நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரூர் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
143 மாணவர்களுக்கு இளங்கலை பட்டங்களை வழங்கினர். செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது-
முழு உடல் பரிசோதனை என்பது இன்று சாதாரண மக்களுக்கு எட்டா கனியாக உள்ளது
இதற்காக ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையிலிருந்து தொடங்கி வைக்கிறார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழக முழுவதும் இந்த திட்டம் மூலம் அனைத்து மக்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1.47 கோடி மக்களுக்கு அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டை முகாம்களில் வழங்கப்படும் என்றார்.
முன்னதாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 30 கோடி மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 4.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 8 புதிய மருத்துவ கட்டடங்களையும் திறந்து வைத்தார். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லோகநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.