ஆக.26.
கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சி மையத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி கே.குமரேஷ் பாபு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சக்திவேல், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.தனபால், கரூர் மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.ராஜலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் நீதியரசர் சுரேஷ்குமார் பேசியது-
இந்த பாதிக்கப்படக்கூடிய மற்றும் குழந்தைகள் சாட்சிகளை விசாரிக்க கூடிய மையம் அதனுடைய தேவை இருந்தால் தான் நாம் சாட்சிகளை விசாரிக்க முடியுமா என்று நினைக்கலாம்.
ஆனால் பாதுகாக்கப்பட்ட ஒரு சூழல் – பயப்படாமல் சாட்சி சொல்லும் சூழலுக்காக அமைக்கப்பட்டது இந்த மையம். பல நேரங்களில் குழந்தைகளின் சாட்சியங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட- குழந்தைகளின் சாட்சியங்கள் மிக முக்கியமான சாட்சிகளாக அவர்களின் சூழ்நிலை சரியாக இல்லாமல் விசாரிக்க முடியாமல் போகும்போது நீதி பரிபாலனை சரியாக இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற மையங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலாவதாகவும், அதற்கு அடுத்தாக கரூர் மாவட்டத்தில் தான் இது போன்ற மையம் அமைந்துள்ளது சிறப்பாகும்.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமை-தவறுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுக்கிறார்கள். வழக்கு நடந்து முடியும்போது ஐந்து ஆண்டுகள் கூட நடக்கிறது அவ்வாறு நடக்கின்ற வழக்குகளில் கொண்டு வரப்படும் சாட்சியங்கள் சரியாக இருக்க வேண்டும் பல நேரங்களில் சாட்சிகள் பிறல் சாட்சிகளாக மாறிவிடுகிறது.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு பயப்படாமல் சொல்வதற்கு ஒரு சூழ்நிலை உருவாக்க வேண்டும்.
தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று வரும் சாட்சிகளுக்கு குறைந்த பட்சம் பாதுகாப்பு என்ன என்று மனதில் தோன்றுகிறது அதன் வெளிப்பாடு தான் இந்த விசாரணை மையம்.
இந்த மையங்களில் நீதிபதிக்கு தனி வழி. குற்றவாளிக்கு தனி வழி, சாட்சிகளுக்கு தனி வழி பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக்கூடிய குழந்தை சாட்சிகளை விசாரிப்பதற்காக தனி இடம் . குற்றம் சாட்டப்பட்டவரும் சாட்சி சொல்பவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாத அளவிற்கு ஒலிவாங்கி மூலம் நீதிபதி விசாரிக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சாட்சி குற்றம் சாட்டப்பட்டவரை நேரில் பார்த்து அடையாளம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால் மட்டுமே அந்த திரை விலக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள். பனை விதைகளை நீதியரசர்கள் நடவு செய்தார்கள். தமிழ்நாடு மற்றும் புதுசேரி பார் கவுன்சிலர் உறுப்பினர் மற்றும் கரூர் வழக்கறிஞர் சங்கம் தலைவர் மாரப்பன், கரூர் அட்வகேட்ஸ் சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர்கள் தமிழ்வாணன். வைத்தீஸ்வரன் நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள். பணியாளர்கள் கலந்து கொண்டனர்.